காத்மாண்டு: திடீர் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பேரழிவிலிருந்து மீண்டெழ நேப்பாளத்துக்குக் குறைந்தது சில பில்லியன் டாலர் தேவைப்படும் என்று அந்நாட்டின் நிதி அமைச்சர் சுவார்னிம் வாக்லே கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து 45 பில்லியன் டாலர் (57.12 பில்லியன் வெள்ளி) மதிப்புகொண்ட பொருளியலான நேப்பாளம் அனைத்துலகச் சமூகத்திடமிருந்து நிதியுதவி கோரிவருகிறது.
இந்தப் பேரிடரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
“ஒட்டுமொத்தமாக இழப்பு, சேதத்துக்கான மதிப்பு, ஒரு வாரம்வாக்கில் கணக்கிடப்படும்போது, குறைந்தது சில பில்லியன் டாலராக வரும்,” என்று புளூம்பெர்க் செய்தி நிறுவனத்துடன் நடந்த நேர்காணலில் திரு வாக்லே தெரிவித்தார்.
“முதற்கட்ட கணிப்புகள் கவலை தருகின்றன,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கரையைப் புரண்ட ஏரி
இதற்கிடையே, ஏரி ஒன்று கரை புரண்டதாக நேப்பாளத்தின் ரசுவா மாவட்டத்துக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்துக்கான ஆக மூத்த நிர்வாகியான நரேந்திர பரியார் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) தெரிவித்தார். ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இமயமலைப் பகுதியில் புதிதாக வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக முன்னதாக நேப்பாளமும் சீனாவும் எச்சரித்திருந்தன.
பொதுவாக ஒவ்வோர் ஆண்டும் இந்தக் காலகட்டத்தில் நேப்பாளத்தில் சுற்றுலா துறை சூடுபிடிக்கும். சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் ஜென் ஸீ தலைமுறையினர் ஊழலுக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்தால் சுற்றுலா துறை திடீரென முடங்கிப்போனது.
இவ்வாண்டு திடீர் வெள்ளம் சுற்றுலா துறைக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமை (ஆகஸ்ட் 26) ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் நேப்பாளத்தின் சுற்றுலாத் துறை நன்கு மீண்டுவரும் என்ற நம்பிக்கையைச் சீர்குலைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக கைலாச மானசரோவர் யாத்திரிகர்களுக்கு இது பொருந்தும்.
ராசுவகாதி-திமுரே பகுதியைப் பேரிடர் தாக்கியது. அது, நேப்பாளத்திலிருந்து திபெத்துக்குப் போகும் யாத்திரிகர்களுக்கான முக்கியப் பாதையாகும்.
பாதுகாப்பு அச்சம்
எல்லாவற்றுக்கும் மேலாக, பருவநிலை மாற்றத்தைக் கருத்தில்கொள்ளும்போது நேப்பாளத்தின் மலைப் பகுதிகள் சுற்றுப்பயணிகளுக்கு உகந்தவையாக இருக்கின்றனவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்தப் பேரிடரின் தாக்கத்தை அறிவதற்கான முழு ஆய்வு தற்போது நடத்தப்பட்டுவருகிறது.


