லண்டன்: தைவானைச் சுற்றிலும் சீனா ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்வதால் பதற்றம் அதிகரித்துள்ளது என்று கூறும் பிரிட்டன், புதன்கிழமை (டிசம்பர் 31), அத்தகைய நடவடிக்கைகளை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளது.
பிரிட்டனின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கையில், “இந்த வாரம் தைவானுக்கு அருகே சீனா நடத்திய ராணுவப் பயிற்சிகளால் இரு தரப்புக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. அது மேலும் அதிகரிக்கக்கூடும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
“தைவான் விவகாரம், இரு தரப்பினரும் அச்சுறுத்தலோ அடிபணிய வைத்தலோ இல்லாமல் அமைதியான முறையில் ஆக்ககரமான பேச்சுவார்த்தை மூலம் இணக்கம் காணப்பட வேண்டிய ஒன்று எனக் கருதுகிறோம். தற்போதைய நிலையை மாற்றுவதற்குத் தன்னிச்சையாக மேற்கொள்ளப்படும் முயற்சிகளையோ அதன் நிலைத்தன்மையைக் குலைக்கும் நடவடிக்கைகளையோ நாங்கள் ஆதரிக்கவில்லை,” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
அமைதியையும் நிலைத்தன்மையையும் கீழறுக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்கும்படி தொடர்ந்து வலியுறுத்துகிறோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சின் கருத்துகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் உண்மையைத் திரித்துக் கூறப்பட்டவை என்றும் பிரிட்டனுக்கான சீனத் தூதரகம் கூறியதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

