பள்ளிகளில் உடற்பயிற்சிக் கல்வியை முக்கிய பாடமாக்குகிறது சீனா

2 mins read
c8a64c02-15ad-4bac-b9ac-ed9280b553c4
பள்ளிகளில் உடற்பயிற்சிக் கல்வியை இரண்டாம் நிலைப் பாடமாக இல்லாமல், முக்கியப் பாடங்களில் ஒன்றாக்குகிறது சீனா. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

ஹாங்காங்: பள்ளிகளில் உடற்பயிற்சிக் கல்வியை இரண்டாம் நிலைப் பாடமாக இல்லாமல் முக்கியப் பாடங்களில் ஒன்றாக்குகிறது சீனா.

குழந்தைப் பருவ உடற்பருமன் அதிகரித்து வரும்நிலையில், ‘முழுமையான கல்வி’யை அந்நாடு நாடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனம், கணிதம், ஆங்கிலம் போன்ற பாட ஆசிரியர்களைப் போலவே உயர்பயிற்சி ஆசிரியர்களும் நடத்தப்படுவதை தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும். மேலும், கால்பந்து, கூடைப்பந்து , கைப்பந்து போன்ற முக்கிய விளையாட்டுகளில் திறன்களை வளர்ப்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு கல்வி அமைச்சு அறிவித்துள்ளதாக சின்ஹுவா செய்தி தெரிவித்தது.

“முழுமையான பள்ளிக்கல்விக்கான அணுகுமுறையில் உடற்பயிற்சிக் கல்வியும் அடங்கும். ஏட்டுக்கல்வியுடன் உடல் உறுதியையும் ஒருங்கிணைப்பது மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உதவி, அவர்களை எதிர்காலத்திற்காக தயாராக வளர்க்கும்,” என்று அமைச்சு கூறியது.

சீனாவை 2035ஆம் ஆண்டிற்குள் சிறந்த கல்வியறிவு பெற்ற நாடாக உருவாக்குவதற்கான தனது முதல் தேசிய திட்டத்தை அந்நாடு ஜனவரி மாதம் வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கிட்டப்பார்வை (மையோபியா), உடற்பருமன் விகிதங்களைக் கட்டுப்படுத்த,தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அன்றாடம் குறைந்தது இரண்டு மணி நேரக் கட்டாய உடற்பயிற்சி உள்ளிட்ட நடவடிக்கைகள் அத்திட்டத்தில் அடங்கும்.

சீனாவில் 2022ன் நடுப்பகுதியில் ஏறக்குறைய 120,000 உடற்பயிற்சி ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தது. இதில் கிராமப்புறங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. புதிய நடவடிக்கை ஓய்வுபெற்ற விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்களை அப்பணிக்குச் சேர்ப்பதை ஊக்குவிக்கும் என்று சின்ஹுவா குறிப்பிட்டது.

மற்றப் பாட ஆசிரியர்களுக்கு அளிக்கப்படுவதைப் போன்றே உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கு பிந்தைய விளையாட்டுக் கடமைகள், குழுப் பயிற்சிக்கு செயல்திறன் அடிப்படையிலான ஊதியம் பெறுவர்.

கொவிட்-19 முடக்கநிலையின்போது உடல் செயல்பாடுகள் குறைந்ததாலும் நொறுக்குத் தீனிகளை இணையத்தில் தருவிப்பு ஆணை செய்வதாலும் 2019 முதல் இளையர் உடற்பருமன் அதிகரித்துள்ளது.

பொருளியல் மந்தமடைந்து, மோசமான உணவுப் பழக்கத்திற்கும் குறைவான உடல் செயல்பாட்டிற்கும் வழிவகுக்கும் அடிப்படை மாற்றங்களால், அடுத்த 10-12 ஆண்டுகளில் உடற்பருமன் விகிதம் உயரும் என்று மருத்துவர்கள் கணிக்கிறார்கள்.

சீனாவில் பருமனான ஆண்பிள்ளைகளின் விகிதம் 1990ன் 1.3 விழுக்காட்டிலிருந்து 2022ல் 15.2% ஆக உயர்ந்தது. இது அமெரிக்காவின் 22 விழுக்காட்டுக்கு அடுத்தநிலை என்றாலும், ஜப்பானின் 6 விழுக்காடு, பிரிட்டன், கனடாவின் 12 விழுக்காடு, இந்தியாவின் 4 விழுக்காட்டைவிட அதிகம்.

பருமனான பெண் பிள்ளைகன் விகிதம் 1990ல் 0.6 விழுக்காடாக இருந்தது 2022ல் 7.7% ஆக உயர்ந்துள்ளது.

“சீனாவில் இறப்பு, உடல் செயலிழப்புக்கு இட்டுச்செல்லும் முக்கிய உடல்பிரச்சினைகளில் ஆறாவது இடத்தில் உள்ள உடற்பருமன், நாட்டின் முக்கிய உடல்நலப் பிரச்சினையாகி உள்ளது,” என்று தேசிய சுகாதார ஆணையம் அக்டோபரில் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்