தென்கிழக்காசியாவில் ‘இவி’ உற்பத்தியை அதிகரிக்கும் சீனா

தென்கிழக்காசியாவில் ‘இவி’ உற்பத்தியை அதிகரிக்கும் சீனா

2 mins read
உள்ளூர் ஊழியர்கள் அடையக்கூடிய பலன் குறித்து எழுந்துள்ள கேள்விகள்
a294a389-57cb-48d9-8d84-8983c72f3643
இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் அண்மையில் நடந்த வாகனக் கண்காட்சியில் இடம்பெற்ற பிவைடி கார். - படம்: ராய்ட்டர்ஸ்

‌‌ஷென்ஸன்: தென்கிழக்காசியாவில் புதிதாகப் பல ஆலைகள் இவ்வாண்டு சீன மின்சார வாகனங்களை (இவி) உற்பத்தி செய்யவிருக்கின்றன.

வெளிநாடுகளில் தங்களின் மின்சார கார்களைப் பிரபலப்படுத்த சீனா எடுக்கும் கூடுதலான முயற்சிகளில் இது அடங்கும்.

சீனாவில் விற்பனைச் சந்தை ‘நிரம்பி வழிவதால்’ இந்த ஆலைகள் அந்தந்த நாடுகளின் பொருளியலுக்கு மெருகூட்டக்கூடும். அதேவேளை, வேலை வாய்ப்புகளைப் பொறுத்தவரை இந்நாடுகளில் உள்ளூர் ஊழியர்கள் எவ்வளவு தூரம் பலனடைவர் என்பது இன்னும் கேள்விக்குறியாக இருக்கிறது என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

சீன மின்சார வாகன நிறுவனமான பிவைடி, இந்தோனீசியாவில் உள்ள தனது புதிய ஆலையில் இவ்வாண்டு முதல் காலாண்டில் உற்பத்திப் பணிகளைத் தொடங்கும். ஏற்கெனவே அந்நிறுவனத்தின் ஆலைகள் தாய்லாந்திலும் கம்போடியாவிலும் செயல்பட்டு வருகின்றன.

அதேபோல் செரி (Chery) போன்ற சீனாவின் இதர மின்சாரக் கார் நிறுவனங்களும் தென்கிழக்காசியாவில் உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளன.

பலத்த போட்டிக்கு மத்தியில் விலையைக் கட்டுப்படியாக வைத்திருக்க சீன கார் நிறுவனங்கள், உள்ளூர் விநியோக நிறுவனங்களுக்குப் பதிலாக சீனாவில் தங்களுடன் இணைந்து செயல்படுபவற்றையே தருவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன ஆலைகள், தென்கிழக்காசிய நாடுகளில் திறக்கப்படும்போது புதிய வேலை வாய்ப்புகள் உருவாகலாம். எடுத்துக்காட்டாக, இந்தோனீசியாவில் உள்ள பிவைடி ஆலை சுமார் 18,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மின்சாரக் கார்கள் மீதான மோகம் பாரம்பரிய கார் நிறுவனங்களுக்கும் அவற்றுடன் பணியாற்றும் விநியோக நிறுவனங்களுக்கும் இடையூறு விளைவிக்கக்கூடும். அதனால், அவை குறைவான ஊழியர்களை வேலைக்கு எடுப்பதற்கான வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்