பெய்ஜிங்: சீன ராணுவம், சர்ச்சைக்குரிய தென்சீனக் கடற்பகுதியில் பிலிப்பீன்ஸ் ஏற்பாடு செய்திருந்த கூட்டுச் சுற்றுக்காவல் பணியைக் கண்காணித்ததாகத் தெரிவித்திருக்கிறது.
வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (அக்டோபர் 30, 31) சுற்றுக்காவல் பணி மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் பின்தொடர்ந்து சென்று கவனித்ததாகவும் சீன ராணுவம் சனிக்கிழமை (நவம்பர் 1) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
அமெரிக்காவும் பிலிப்பீன்சும் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொண்டுள்ளன. தென்சீனக் கடல் உள்ளிட்ட பகுதிகளுக்குப் புதிய கூட்டுப் பணிக்குழுவை அமைக்கும் திட்டங்களை அவை வெள்ளிக்கிழமை அறிவித்தன. அந்தக் கடற்பகுதி வழியாக ஆண்டுதோறும் கொண்டுசெல்லப்படும் சரக்குகளின் மதிப்பு $3 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகம்.
கூட்டுச் சுற்றுக்காவல் பணி, வட்டார அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் தளபதி ஒருவர் கூறினார். பிலிப்பீன்ஸ், வட்டாரத்தில் பிரச்சினை தரக்கூடிய நாடு என்று அவர் குறைகூறினார்.
ராணுவப் படையினர் உயர் விழிப்புநிலையில் உள்ளனர் என்றும் எல்லை, கடல்துறை உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க உறுதியோடு இருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
பெய்ஜிங்கில் உள்ள பிலிப்பீன்ஸ் தூதரகம் உடனடியாகக் கருத்து எதனையும் கூறவில்லை.
வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிலிப்பீன்ஸ், அமெரிக்கா ஆகியவை தென்சீனக் கடலில் கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டன.

