தென்சீனக் கடலில் சீனப் படகுகள் சயனைடு பயன்பாடு: பிலிப்பீன்ஸ்

தென்சீனக் கடலில் சீனப் படகுகள் சயனைடு பயன்பாடு: பிலிப்பீன்ஸ்

படம்: பிலிப்பீன்ஸ் ஆயுதப் படை

13 Apr 2026 - 6:44 pm

1 mins read

மணிலா: சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதியில் இருக்கும் தமது ராணுவப் புறக்காவல் நிலையத்தின் நிலைத்தன்மைக்கும் அங்குள்ள வீரர்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், 2025ஆம் ஆண்டில் சீனப் படகுகள் சயனைடு பயன்படுத்தியதை பிலிப்பீன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி, அக்டோபர் மாதங்களில் செகண்ட் தாமஸ் ஷோல் (Second Thomas Shoal) அருகே சீனப் படகுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட போத்தல்களில் சயனைடு இருந்தது ஆய்வகச் சோதனையில் உறுதி செய்யப்பட்டதாகச் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பிலிப்பீன்சின் தேசியப் பாதுகாப்பு மன்றம் தெரிவித்தது.

மேலும், அந்த நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருளைப் பயன்படுத்துவது ஒரு வகையான சதிவேலை என்றும் அது இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அந்த சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் தரைதட்டி நிற்கும் இரண்டாம் உலகப் போர் காலத்துக் கப்பலான BRP சியரா மாட்ரே (BRP Sierra Madre) கப்பலின் நிலைத்தன்மையைப் பாதிக்கிறது என்றும் அது கூறியது.

வேண்டுமென்றே சயனடைப் பயன்படுத்துவது கடலைச் சட்டவிரோத, அழிவுப் பாதையை நோக்கி இட்டுச்செல்வதோடு மட்டுமன்றி, தமது கடற்படை வீரர்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக மன்றத்தின் பேச்சாளர் செய்தியாளர்களிடம் கூறினார்.

சர்ச்சைக்குரிய அந்தப் பகுதியில் சுற்றுக்காவல் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அந்த ஆய்வக முடிவுகள் குறித்து தூதரக ரீதியிலான எதிர்ப்பைத் தெரிவிக்கப் பரிந்துரைக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
பிலிப்பீன்ஸ்சீனாபடகு