ஜோகூரில் வென்றால் நஜிப் ரசாக் விடுவிக்கப்படுவாரா? பாரிசான் மறுப்பு

ஜோகூரில் வென்றால் நஜிப் ரசாக் விடுவிக்கப்படுவாரா? பாரிசான் மறுப்பு

2 mins read
4e441123-d716-4f5e-9888-b8240ff46e65
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக். - படம்: பெரித்தா ஹரியான்

புத்ராஜெயா: சிறைத் தண்டனை அனுபவித்து வரும் எந்தவொரு தனிநபரை விடுதலை செய்வதற்கும் தேர்தல்களை ஒரு கருவியாகப் பயன்படுத்த முடியாது என்று அம்னோ கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அஸலினா ஓத்மான் சயித் கூறியுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தின் (சட்டம் மற்றும் நிறுவனச் சீர்திருத்தம்) அமைச்சருமான அஸலினா, எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையும் விடுவிக்க தேர்தல்களைப் பயன்படுத்தலாம் என எந்தச் சட்டமும் இல்லை என்று கூறினார்.

மாறாக, பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் மலேசிய மாமன்னரிடம் மட்டுமே உள்ளது என்று அவர் கூறினார்.

“தேர்தல்கள் மூலம் யாரையும் விடுவிக்க முடியும் என்று எந்தச் சட்டமும் இல்லை. மன்னிப்பு வழங்குவது மாமன்னரின் அதிகாரம். இதற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,” என்று அவர் செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 7) நடைபெற்ற தேசிய இணையப் பாதுகாப்பு உச்சநிலை மாநாடு 2026ல் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

ஜோகூர் மாநிலத் தேர்தல் பிரசாரத்தின்போது, ​​பாரிசான் நேஷனல் (பிஎன்) வெற்றி பெற்றால் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் விடுதலை செய்யப்படலாம் என்று பல தரப்பினர் கூறிய கூற்றுகள் குறித்து அவர் கருத்துத் தெரிவித்தார்.

ஜோகூர் தேர்தல்கள் குறித்துப் பேசிய அஸலினா, மாநிலத்தில் உள்ள மக்களின் முன்னுரிமைகள் மற்றும் உள்ளூர்ப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி, ‘பிஎன்’ தேர்தல் அமைப்பு ஒருங்கமைக்கப்பட்ட மற்றும் கட்டமைக்கப்பட்ட முறையில் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருவதாகக் கூறினார்.

“பிஎன் நீண்டகாலமாக நிலைபெற்ற அரசியல் கட்சி. மேலும் நாங்கள் மாநில மக்களின் முன்னுரிமைகளில் பேரளவில் கவனம் செலுத்தி பிரசாரம் செய்கிறோம்.

“பிற மாநிலங்களைச் சேர்ந்த குழுக்களை உள்ளடக்கிய ஒரு வளர்ப்புக் குடும்பத் திட்டம் எங்களிடம் உள்ளது. இது, உள்ளூர்ப் பிரச்சினைகள் மீதான எங்கள் பிரசாரத்தின் கவனத்தை மேம்படுத்தவும் உதவுகிறது,” என்று அவர் கூறியதாக பெர்னாமா தெரிவித்தது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் ஜோகூர் மாநிலத் தேர்தலில், பாரிசான் நேஷனல் கூட்டணி அனைத்து 56 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

குறிப்புச் சொற்கள்
ஜோகூர்நஜிப் ரசாக்விடுதலை