கொவிட்-19: உச்ச விழிப்புநிலையில் தாய்லாந்து, இந்தோனீசியா

2 mins read
ece51ad2-4d7b-4a68-8cdd-39bbda14418b
தாய்லாந்தில் அதிகரித்துவரும் கொவிட்-19 தொற்றால் பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் மக்களை எச்சரித்துள்ளனர். - படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: தாய்லாந்தின் தொற்றுநோய்க் கட்டுப்பாட்டுத் துறை, இம்மாதம் 2ஆம் தேதி நிலவரப்படி புதிதாக 10,192 கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதற்குமுன் ஜூன் 1ஆம் தேதி 18,102 சம்பவங்கள் பதிவாகின. அவற்றோடு சேர்த்து மொத்தம் 28,294 பேரிடம் கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புதிதாகப் பாதிக்கப்பட்டோரில் 9,304 பேர் வெளிநோயாளிகள். கடுமையாகப் பாதிக்கப்பட்ட 888 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்; ஒருவர் இறந்துவிட்டார்.

மே 27ஆம் தேதி புள்ளிவிவரப்படி இவ்வாண்டு பதிவான ஒட்டுமொத்த கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் 323,301. இவ்வாண்டு மட்டும் 69 பேர் தொற்றால் மாண்டனர்.

மழைக்காலத்தாலும் பள்ளிகள் மீண்டும் திறந்ததாலும் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்ததாக மருத்துவச் சேவைகள் துறை தலைமை இயக்குநர் டாக்டர் தவீசின் விசனுயோதின் தெரிவித்தார்.

இவ்வாண்டு மாண்ட 69 பேரில் பெரும்பாலோர் மூத்தோர் என்றும் வேறு மருத்துவப் பிரச்சினைகள் இருந்தோர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கொவிட்-19 கடுமையான தொற்றுநோயாகக் கருதப்படாததால் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டோர் சேர்க்கப்படுவது அவசியமா என்பதை ஆராய்வர்.

தொற்றால் பாதிக்கப்பட்டோர் வேலையை நிறுத்தும்படியோ தனிமைப்படுத்திக்கொள்ளும்படியோ எந்தப் பரிந்துரையும் இல்லை. நோய்வாய்ப்பட்டதற்காக விடுப்பு கொடுப்பது மருத்துவர்களின் பரிசோதனையைப் பொறுத்தது என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இந்தோனீசியாவில் விழிப்புநிலை

கொவிட்-19 தொற்றுப் பரவல் அதிகரித்துவருவதால் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் அனைத்தும் தயார்நிலையில் இருக்கும்படி இந்தோனீசியச் சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

ஆசியாவில் அதிகரித்துவரும் கொவிட்-19 சம்பவங்கள் குறித்துப் பேச சுகாதார அமைச்சர் புடி சடிகின், அதிபர் பிரபோவோ சுபியாந்தோவை ஜூன் 3ஆம் தேதி சந்தித்தார்.

தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா ஆகியவற்றில் கொவிட்-19 தொற்று அதிகரித்ததை அடுத்து சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் விழிப்புடன் இருக்கும்படி அனைத்துக்கும் அமைச்சு கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்தது.

சுகாதார அமைச்சு ஜூன் 3ஆம் தேதி வெளியிட்ட அண்மைய தகவல்களின்படி, இந்தோனீசியாவில் கடந்த வாரம் ஏழு பேருக்குக் கொவிட்-19 தொற்று உறுதியானதாகத் தெரிவிக்கப்பட்டது.

அண்டை நாடுகளில் அதிகரிக்கும் கிருமித்தொற்றுச் சம்பவங்களால் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் விழிப்புநிலையில் இருக்கும்படி இந்தோனீசியச் சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
அண்டை நாடுகளில் அதிகரிக்கும் கிருமித்தொற்றுச் சம்பவங்களால் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் விழிப்புநிலையில் இருக்கும்படி இந்தோனீசியச் சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்
குறிப்புச் சொற்கள்