நேப்பாளத்தில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் ஆபத்து: சீனா எச்சரிக்கை

நேப்பாளத்தில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் ஆபத்து: சீனா எச்சரிக்கை

2 mins read
bfb3271a-73df-45cd-a324-7123646fe068
நேப்பாளத்தின் எல்லைக்கு அருகில் சோசென் கோலா - புரேபு சாங்போ ஆறுகள் இணையுமிடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால், திடீரென பெரிய தடுப்பு ஏரி உருவாகியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 2 மில்லியன் கன மீட்டரைத் தாங்கக் கூடிய அந்த ஏரி நிரம்பி வழிவதாக அது எச்சரித்துள்ளது. - படம்: காத்மாண்டு போஸ்ட்
Google News Preferred Icon

காத்மாண்டு: நேப்பாளம் - திபெத் எல்லைக்கு அருகில் நிலச்சரிவு காரணமாக இயற்கையாக உருவாகியுள்ள தடுப்பு ஏரி உடைந்து மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடும் என்று சீன அரசு எச்சரித்துள்ளது.

நேப்பாளத்தின் சோசென் கோலா, புரேபு சாங்போ ஆறுகள் இணையுமிடத்தில் நிலச்சரிவால் தற்செயலாக உருவாகியுள்ள அந்த ஏரியில், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) காலை நிலவரப்படி இரண்டு மில்லியன் கன மீட்டர் நீர் சேர்ந்துள்ளது.

அடுத்த மூன்று நாள்களில் மேலும் மூன்று மில்லியன் கன மீட்டர் நீர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதால், ஏரியின் தடுப்பு உடைந்து ஆபத்தை விளைவிக்கும் சாத்தியங்கள் அதிகமாக இருப்பதாகச் சீன நீர்வள அமைச்சு தெரிவித்துள்ளது.

புதன்கிழமை (ஆகஸ்ட் 26) நேப்பாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போதேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

வீடுகள், பாலங்கள், உள்கட்டமைப்புகள் பெரும் சேதமடைந்துள்ளன. நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கீழ்நோக்கிப் பாயும் திரிசூலி ஆற்றுப் பகுதிகளில் உடல்கள் மீட்புப் படையினரால் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், புதிதாக உருவாகியுள்ள இந்த இயற்கை ஏரி மீட்புப் பணிகளுக்கு மேலும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. ஏரி உடைந்தால் ஆற்றுப் படுகை பகுதிகளில் மீண்டும் கடுமையான நீர்வரத்து ஏற்பட்டு பெரும் பாதிப்புகள் உண்டாகலாம்.

ஏரியின் நீர்மட்டத்தைச் சீன அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.வெள்ள அபாயத்தைச் சமாளிக்கவும் அவசரகால மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் இருநாட்டு எல்லைப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்