நியூயார்க்: கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 37 மாடிக் கட்டடம் ஒன்றின் சில தூண்கள் திடீரென வளைந்ததால் அக்கம்பக்கப் பகுதிகளில் இருந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், அந்தக் கட்டடத்தின் 15 தளங்களை மீண்டும் கட்டவிருப்பதாக ‘மெட்ரோ லாஃப்ட்’ கட்டுமான நிறுவனம் அறிவித்துள்ளது.
முன்னணி மருந்து நிறுவனமான ஃபைசரின் முன்னாள் தலைமையகமாகச் செயல்பட்ட அக்கட்டடம், தற்போது குடியிருப்பு வளாகமாக மாற்றப்பட்டு வருகிறது.
அக்கட்டடத்தின் 21வது தளம் மற்ற தளங்களைவிட உயரமாக வடிவமைக்கப்பட்டதால், அதன் இரண்டு தூண்கள் அதிக எடையைத் தாங்க முடியாமல் வளைந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதனால், அதற்குமேல் உள்ள 15 தளங்கள் தொய்வடைந்தன. தற்போது தற்காலிக முட்டுகள்மூலம் கட்டடம் நிலைநிறுத்தப்பட்டு, சுற்றியுள்ள சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. எனினும், அவசரமற்ற இதர பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தளங்களின் முகப்பு, தரைப்பகுதிகள் மற்றும் எஃகுத் தூண்களை முழுமையாக மாற்றி, புதிதாகக் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தச் சேதம் ஒட்டுமொத்தத் திட்டத்தில் சிறுபகுதியே என்பதால், 720 மில்லியன் டாலர் மதிப்பிலான கட்டுமானத் திட்டத்தின் காலக்கெடு பாதிக்கப்படாது என நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நேத்தன் பெர்மன் கூறியுள்ளார்.
இச்சம்பவம் அலுவலகங்களை வீடுகளாக மாற்றும் திட்டங்களில் உள்ள பொறியியல் சவால்களைக் காட்டுகிறது.
இருப்பினும், நியூயார்க்கின் வீடமைப்புப் பற்றாக்குறைக்கு இத்தகைய மறுசீரமைப்புத் திட்டங்கள் அவசியமானவை என்றும், கட்டடத்தின் தூண்கள் வளைந்தது குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என்றும் நியூயார்க் மேயர் ஸோரான் மம்தானி தெரிவித்துள்ளார்.

