மணிலா: பிலிப்பீன்சுடனான தற்காப்பு ஒப்பந்தத்தின்படிச் செயல்படவேண்டும் என்ற அசைக்க முடியாத கடமை உணர்வு தங்களிடம் இருப்பதாக அமெரிக்க தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் மறுவுறுதியளித்துள்ளார்.
பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) பேசிய அவர், தென்சீனக் கடலில் சீனாவின் செயல்கள் காரணமாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாவதாகக் குறிப்பிட்டார்.
திரு ஹெக்செத், பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியரைச் சந்தித்தார். இந்தோ பசிபிக் வட்டாரத்திலும் தென்சீனக் கடலிலும் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் சீனாவின் மிரட்டல்கள் அதிகரித்து வரும் வேளையில் தொடர்ந்து வலுவான முறையில் ஒத்துழைக்கப்போவதாக இருவரும் தெரிவித்தனர்.
“உலகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம். அதுவும் கம்யூனிஸ்ட் நாடான சீனாவிடமிருந்து வரும் மிரட்டல்களைக் கருத்தில்கொள்ளும்போது குறிப்பாக உங்கள் நாட்டுக்கு அது பொருந்தும்,” என்றார் திரு ஹெக்செத்.
அதேபோல் திரு மார்க்கோஸ், “தென்சீனக் கடலின் இந்தோ-பசிபிக் பகுதியில் ஒன்றாக அமைதியை நிலைநாட்டுவதில் இரு நாடுகளும் கடமைப்பட்டுள்ளதை (திரு ஹெக்செத்தின் வருகை) எடுத்துரைக்கிறது,” என்றார்.
தென்சீனக் கடலில் அண்மைக் காலமாக சீனா ஆதிக்கம் செலுத்தும் செயல்களை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய சூழலில் திரு ஹெக்செத், திரு மார்க்கோஸ் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.