காஸாவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டு நெருக்கடி: ஆய்வு

உடனடி உதவிக்கு எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு அழைப்பு

காஸாவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டு நெருக்கடி: ஆய்வு

2 mins read
8fc91fc5-9166-4193-a4ee-840dbe5277ec
காஸாவில் உள்ள அல்-ரந்திசி மருத்துவமனையில், 2025 ஆகஸ்ட் 7ஆம் தேதி பாலஸ்தீன மருத்துவர் அகமது பாசல் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள சிறுவனைப் பரிசோதிக்கிறார். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

ஜெனிவா: காஸாவில் திட்டமிட்டு உணவு, உதவிப் பொருள்களை இஸ்ரேல் கட்டுப்படுத்தியதன் மூலம், அங்கு ‘செயற்கையான ஊட்டச்சத்துக் குறைபாட்டு’ நெருக்கடிநிலை உருவாக்கப்பட்டுள்ளதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு (எம்எஸ்எஃப்) குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டின் பிற்பகுதி முதல் 2026 தொடக்கம் வரை காஸாவில் உள்ள நான்கு மருத்துவ வசதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் அவ்வமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகளில் 90 விழுக்காட்டினர் குறைமாதக் குழந்தைகளாக உள்ளனர். ஆரோக்கியமான தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகளைவிட அக்குழந்தைகளின் இறப்பு விகிதம் இரு மடங்கு அதிகம் என்று ஆய்வு குறிப்பிட்டது.

ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள பெண்களிடையே கருச்சிதைவு ஏற்படும் விகிதம் அதிகரித்துள்ளதோடு, பிறக்கும் குழந்தைகளின் எடையும் மிகக் குறைவாகவே உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உதவி விநியோகத்திற்கு மாற்றாக, 2025ல் அமெரிக்கா, இஸ்ரேல் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட ‘காஸா மனிதாபிமான அறக்கட்டளை’ நிலைமையை மேலும் மோசமாக்கியதாக அந்த அமைப்பு சாடியுள்ளது.

மே 2025 நிலவரப்படி 400ஆக இருந்த உணவு விநியோக மையங்கள் நான்காகக் குறைந்துள்ளன.

அந்த மையங்கள் ராணுவமயமாக்கப்பட்டதாகவும், உணவு விநியோக இடங்களின் அருகே வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் மருத்துவர்கள் அமைப்பின் அவசரப் பிரிவுத் தலைவர் ஜோஸ் மாஸ் கூறினார்.

2025 அக்டோபர் முதல் போர்நிறுத்தம் நடப்பில் இருந்தபோதும், நிலைமை மிகவும் மோசமாகவே உள்ளது. 2023ஆம் ஆண்டு போருக்கு முன்னர் காஸாவில் ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்ததில்லை என்று அமைப்பின் அதிகாரி மெர்ஸ் ரோகாஸ்பானா கூறினார்.

உடனடியாக எந்தத் தடையுமின்றி காஸாவிற்குள் மனிதாபிமான உதவிப் பொருள்களை அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இக்கட்டுப்பாடுகள் குறிப்பாகக் குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களின் உடல்நலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அது குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்