நியூயார்க்: முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், 78, தற்போது புதிதாக இன்னொரு பொருளுக்கு விளம்பரம் செய்துள்ளார்.
கடந்த வாரம் ‘டிரம்ப் கடிகாரங்கள்’ என்ற பெயரில் அதிக மதிப்புடைய கடிகாரங்களை அவர் வெளியிட்டார்.
ஒவ்வொன்றிலும் அவரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
“கிட்டத்தட்ட 200 கிராம் தங்கம், 100க்கு மேற்பட்ட அசல் வைரங்கள்,” என்று காணொளி ஒன்றில் கூறிக் கடிகாரங்களை அறிமுகப்படுத்தினார் டிரம்ப். தமது ‘டுரூத் சோஷியல்’ (Truth Social) சமூக ஊடகத் தளத்துடனும் காணொளியை அவர் இணைத்தார்.
வெளியிட்ட கடிகாரங்களில் ஆக அதிக விலையுடைய கடிகாரம் அமெரிக்க டாலர் $100,000 (S$128,800).
“அத்தனையும் வைரங்கள். எனக்குத் தங்கம் பிடிக்கும். எனக்கு வைரங்கள் பிடிக்கும். நாம் அனைவருக்குமே பிடிக்கும்,” எனக் காணொளியில் கூறினார் அவர்.
தரம் என்பது தமக்கு மிக முக்கியம் என்றும் முழக்கமிட்டிருந்தார்.
இருப்பினும், அவர் வெளியிட்ட கடிகாரங்களின் தரம், விற்பனை விலை தொடர்பில் கடிகார உலகில் உள்ள நிபுணர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்தக் கடிகாரங்களைத் தயாரிக்க அமெரிக்க டாலர் 15,000 வெள்ளி தான் ஆகியிருக்கும் என்று கூறிய பிரபல கடிகார நிறுவனர் திரு பென் கூக், லாபம் கிட்டத்தட்ட அமெரிக்க டாலர் 80,000 வெள்ளியாக இருக்கும் என்று சுட்டினார்.
ஐந்து மணி நேரத்தில் தயாரிக்கப்பட்ட சீன இணைய வர்த்தகத் தளமான ‘அலிஎக்ஸ்பிரஸ்’ கடிகாரங்கள் போல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“யாராவது இந்தக் கடிகாரங்களை வாங்கினால், அவரிடம் விற்பதற்கு என்னிடம் ஒரு பாலம் உள்ளது,” என்றார் ‘மென்டாவாட்சஸ்’ நிறுவனர் திரு அதாம் கோல்டன்.
ஏற்கெனவே தம் பெயரில் மாமிசத் துண்டுகள், மின்னிலக்க வர்த்தக அட்டைகள், பைபிள்கள் போன்றவற்றை விளம்பரப்படுத்தியுள்ளார் திரு டிரம்ப்.

