புதத்தான்: சாபா மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளான சன்டாக்கான், லஹாட் டத்து ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள், பலத்த காற்றுக்குத் தயாராகும்படி மலேசியத் துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமிடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அடுத்த இரண்டு மூன்று நாள்களில், நிலைமை மோசமானால் வீடுகளில் இருந்து வெளியேறவும் நேரிடலாம் என்று அவர் எச்சரித்தார். மத்திய பேரிடர் நிர்வாகக் குழுவின் தலைவரான அவர் மேற்குப் பகுதியைப் பாதித்த வானிலை கிழக்கு நோக்கித் திரும்புவதை குறிப்பிட்டார்.
“யாரும் பதற்றப்படுவதற்கு இதை அறிவிக்கவில்லை. ஆனால் எதற்கும் தயாராக இருப்பதை உறுதிசெய்வதே நோக்கம். வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது, முக்கியமான ஆவணங்களைத் தயாராக எடுத்துவைத்துக்கொள்ள இது உதவும், ” என்று அவர் கூறினார். இதனை 17 செப்டம்பர் (புதன்கிழமை) தாமான் ஸ்ரீ கிராமாட் சமூக மன்ற அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளோரைச் சந்தித்த பிறகு, அவர் தெரிவித்தார்.
மாநில, மாவட்ட பேரிடர் நிர்வாகக் குழுக்களுக்கும் உதவி முகவைகளுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். சன்டாக்கான், லஹாட் டத்து மாவட்டங்களைப் பலத்த காற்று நெருங்கிவருவதால் அனைவரும் தயாராக இருக்கவேண்டும் என்பதை துணைப் பிரதமர் வலியுறுத்தினார்.
கிராமப்புற, வட்டார மேம்பாட்டு அமைச்சருமான துணைப் பிரதமர் அகமது ஸாஹிட், புதத்தான் மாவட்டத்தில் இயங்கும் மேலும் சில ,தற்காலிக நிவாரண முகாம்களைப் பார்வையிட்டார்.
நிலச்சரிவில் சேதமடைந்த வீடுகளின் மறுசீரமைப்புக்கான பட்டியலை சாபா மாநில பேரிடர் நிர்வாகக் குழு சமர்ப்பித்துள்ளதாகவும் அதனை மலேசிய அரசாங்கம் பரிசீலிப்பதாகவும் அவர் கூறினார். மேலும் அரசாங்க அதிகாரிகளும் அமைப்புகளும் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் வழங்க தேவையான வளங்களுடன் அணிதிரட்டப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பேரிடரின் விளைவுகளை நேரடியாக அறிந்துகொள்ள பிரதமர் அன்வார் இப்ராகிம் சாபா மாநிலத்துக்கு விரைவில் வரவுள்ளதையும் திரு அகமது ஸாஹிட் அறிவித்தார்.