பாங்குரா: பங்ளாதேஷில் வெள்ளத்தால் தத்தளிக்கும் பகுதிகளில் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக வித்தியாசமான முயற்சி பின்பற்றப்படுகிறது.
சூரிய சக்தியால் இயங்கக்கூடிய மிதக்கும் பள்ளிகள் பிள்ளைகளுக்குக் கல்வி புகட்ட உதவுகின்றன. சாலைகளும் கிராமங்களும் பெருவெள்ளத்தால் துண்டிக்கப்படும்போது பிள்ளைகள் வகுப்புகளுக்குப் போகாமல் இருக்கக்கூடாது என்பதற்காக அந்த ஏற்பாடு.
மேற்கே உள்ள பாங்குரா கிராமத்தின் தெருக்கள், பருவமழையால் ஏற்படும் வெள்ளத்தில் மூழ்குவது வழக்கம்.
அதனால் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது.
புதிய ஏற்பாட்டின்படி பள்ளிகளுக்கு அவர்கள் போகவேண்டியதில்லை. மாறாகப் பள்ளிகள் படகுகளில் பிள்ளைகளை நோக்கிப் போகின்றன.
‘படகுப் பள்ளிகள் திட்டம்’ 2002ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. கட்டடக் கலைஞர் முகம்மது ரிஸ்வான் என்பவர் அவருக்குக் கிடைத்த $500 உபகாரச்சம்பளத்தைக் கொண்டு அதனை ஆரம்பித்தார். ஷிதுலாய் ஸ்வாநிர்வார் சங்ஸ்தா எனும் லாப நோக்கமற்ற தேசிய அளவிலான அமைப்பாக அது உருவெடுத்துள்ளது.
இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் பள்ளிகளாகவும் நூலகங்களாகவும் மருந்தகங்களாகவும் சேவையாற்றுகின்றன. அவற்றின் மூலம் 22,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துள்ளனர். திட்டம் இந்த ஆண்டின் கல்விக்கான யுனெஸ்கோ கன்ஃப்யூஷியஸ் பரிசை வென்றுள்ளது.