அதிபர் டிரம்ப்பை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஐரோப்பியத் தலைவர்கள்

அதிபர் டிரம்ப்பை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஐரோப்பியத் தலைவர்கள்

2 mins read
நேட்டோ மாநாட்டில் அமெரிக்காவிடம் ஆயுதங்கள் வாங்கத் திட்டம்
3b390154-40eb-4149-b0ef-da93fc8489f0
அமெரிக்க அதிபரும், துருக்கியின் அதிபரும் ராணுவ மரியாதையைப் பார்வையிடுகின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

அங்காரா: துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெறும் நேட்டோ உச்சநிலை மாநாட்டில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை கூட்டணியில் தொடர்ந்து நீடிக்க வைப்பதற்காக ஐரோப்பியத் தலைவர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரான் போர், கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுடன் டிரம்ப் மீண்டும் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் சூழலில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

எனவே, நேட்டோ மாநாட்டில் அதிபர் டிரம்ப்பை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஐரோப்பியத் தலைவர்கள் ஈடுபட விருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) துருக்கி வந்தடைந்த டிரம்ப், அதிபர் தையிப் எர்டோகனுடனான நட்பு இல்லையென்றால் தாம் இந்த மாநாட்டைப் புறக்கணித்திருக்கக்கூடும் என்றும் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கப் படைகளை மேலும் திரும்பப்பெற வாய்ப்புள்ளது எனவும் கூறினார்.

ஈரான் போரின்போது ஐரோப்பிய நாடுகள் தங்கள் வான்வெளியையும் ராணுவத் தளங்களையும் பயன்படுத்த அமெரிக்காவை அனுமதிக்கவில்லை என்று டிரம்ப் குற்றம் சாட்டினார்.

தமக்கு நெருக்கமாக இருந்த இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி உதவ மறுத்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவின் சுமையைக் குறைக்கும் வகையில், ஐரோப்பிய நாடுகள் தங்களின் சொந்தப் பாதுகாப்பிற்கு 50 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய ஆயுத ஒப்பந்தங்களை அறிவித்துள்ளன.

நேட்டோவின் 32 நாட்டுத் தலைவர்களும் கூட்டுப் பாதுகாப்பிற்கான தங்களின் கடப்பாட்டை மாநாட்டுப் பிரகடனத்தின் மூலம் உறுதிப்படுத்த உள்ளனர்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அதிபர் எர்டோகன், நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே ஆகியோருடன் டிரம்ப்பிற்கு இருக்கும் நல்லுறவு மாநாட்டில் நிலவும் பதற்றத்தைத் தணித்து சுமூகமான முடிவை எட்ட உதவும் என்று ஐரோப்பிய அதிகாரிகள் நம்புகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
நேட்டோஅமெரிக்காடோனல்ட் டிரம்ப்துருக்கிமாநாடு