தென்கிழக்காசியாவில் வெள்ளம்; உயிரிழப்பு அதிகரிப்பு

2 mins read
e227ef9d-35a0-47e8-aadd-f36752b4451e
மேற்கு சுமத்திராவில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதம். - படம்: இபிஏ

ஜகார்த்தா: தென்கிழக்காசியாவின் பல்வேறு பகுதிகளைப் பாதித்துள்ள வெள்ளத்துக்குப் பலியானோரின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) குறைந்தது 129ஐத் தொட்டது.

பாதிக்கப்பட்ட குடிமக்களுக்கு உதவுவது, மின்தடையைச் சரிசெய்வது, மீட்புப் பணிகளுக்கு வகைசெய்து உதவுவது போன்ற நடவடிக்கைகளில் இவ்வட்டாரத்தில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் பெரும் பகுதிகள் சூறாவளியால் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

மலாக்கா நீரிணையில் வழக்கத்துக்கு மாறாக புயல் காற்று உருவானது.

இந்தோனீசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்டுள்ள வெள்ளம், நிலச்சரிவுகளுக்குக் குறைந்தது 72 பேர் பலியானதாக வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. மரண எண்ணிக்கை குறைந்தது 84ஆகப் பதிவானது என்றும் சில தகவல்கள் தெரிவித்தன.

மேலும் பலரைக் காணவில்லை என்று மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

வட சுமத்திராவில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 62 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் காவல்துறை அதிகாரி ஃபெரி வலின்டுக்கான் கூறியிருந்தார். குறைந்தது 65 பேர் தேடப்பட்டு வந்ததாகவும் அவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியிருந்தார்.

அருகே மேற்கு சுமத்திராவில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துவிட்டனர். 12 பேரைக் காணவில்லை என்று உள்ளூர் பேரிடர் நிர்வாக அமைப்பு தெரிவித்தது.

வட சுமத்திராவில் மக்களை வெளியேற்றுவது, உதவி வழங்குவது ஆகியவற்றில் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாக திரு வலின்டுக்கான் சொன்னார். அந்த வட்டாரத்தில் சில இடங்களைச் சென்றடைய முடியாத நிலை இன்னும் தொடர்வதாகவும் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

தாய்லாந்தின் ஹட் யாய் நகரில் வெள்ளிக்கிழமையன்று மழை பெய்வது ஒருவழியாக நின்றது. ஆனால் அங்கு மின்தடை தொடர்வதாகவும் கணுக்கால் உயரத்துக்கு வெள்ளம் இன்னும் தேங்கி நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் குறைந்தது இருவர் மாண்டுவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்