லண்டன்: இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள பிரிட்டன் - ஐரோப்பிய ஒன்றிய உச்சநிலை மாநாட்டுக்கு முன்னதாக, பிரெக்சிட் நடைமுறைக்குப் பிந்தைய உணவு, வேளாண் ஏற்றுமதிப் பரிசோதனைகளை அகற்றுவதற்கான வரைவு உடன்பாட்டிற்குப் பிரிட்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்புதல் அளித்துள்ளன.
‘எஸ்பிஎஸ்’ எனும் சுகாதார மற்றும் தாவரச் சுகாதார ஒழுங்குமுறைகள் எனப்படும் இந்த ஒப்பந்தத்திற்கான 200 பக்க வரைவு ஆவணம், புதன்கிழமை நடைபெறும் கூட்டத்தில் பரிசீலிப்பதற்காக பிரசல்சில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்குச் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் கருதுகிறது.
இவற்றுடன், பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் உச்சநிலைத் தலைவர்களுக்கான 15 பக்க வரைவுக் கூட்டறிக்கையும் கரிம வெளியேற்றக் குறைப்பு, இளையர்களுக்கான பயண-வேலைத் திட்டம் தொடர்பான ஒப்பந்த வரைவுகளும் சுற்றறிக்கையாக விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ‘இயக்கவியல் சீரமைப்பு' என்னும் செயல்முறையின்கீழ் பயிர்கள், விலங்குகள், உணவு வர்த்தகத் தரநிலைகள் குறித்த தற்போதைய ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கும் அவற்றுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொள்வதற்கும் பிரிட்டன் கடப்பாடு கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
