‘ஃபோர்ப்ஸ்’ அமைப்பின் உலகளாவிய ‘சிஇஓ’ மாநாடு 2026ல் பிரிஸ்டீஜ் குழுமம்

‘ஃபோர்ப்ஸ்’ அமைப்பின் உலகளாவிய ‘சிஇஓ’ மாநாடு 2026ல் பிரிஸ்டீஜ் குழுமம்

எதிர்காலத் திட்டம் குறித்து பிரிஸ்டீஜ் குழுமத் தலைவர் கருத்துரைத்தார்
படம்: தப்லா வாரஇதழ்

29 Oct 2026 - 8:59 pm

3 mins read

சிங்கப்பூரின் ஷங்ரிலா ஹோட்டலில் ஃபோர்ப்ஸ் ஊடக அமைப்பின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரிகளின் 2026ஆம் ஆண்டுக்கான மாநாடு கடந்த அக்டோபர் 7, 8 ஆகிய இரு நாள்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.

அழைப்பு வழங்கப்பட்டோர் மட்டுமே கலந்துகொள்ளக்கூடிய அந்த மாநாடு இதோடு 24வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் உலக வர்த்தகர்களின் மிக உயர்மட்டத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அதில் பிரிஸ்டீஜ் குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமாகிய இர்ஃபான் ரசேக் மாநாட்டின் சிறப்புப் பேராளர்களில் ஒருவராகக் கலந்துகொண்டார். அப்போது தப்லா வாரஇதழுக்கு வழங்கிய நேர்காணில் அவரது நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.

அவரது நிறுவனங்கள் பாரம்பரியமாக சொத்து நிர்வாகத்தில் முழுவீச்சில் இயங்கிவருகின்றன. அதனையும் கடந்து இந்தியாவில் உள்ள மூத்தோருக்கு ஏற்ற வசதிகளுடன் வாழ்விடங்களை அமைப்பதுடன் உயர்கல்வி நிலையங்களை அமைப்பது போன்ற செயல்பாடுகளில் கவனம் செலுத்த திட்டமிடுவதாகக் கூறினார்.

மூத்தோர் வாழ்விடங்களுக்கான அறிமுகத் திட்டங்களில் அவரது நிறுவனம் ஏற்கெனவே செயலாற்றுகிறது என்ற அவர், பணி ஓய்வு பெற்ற பிறகு முதியோர் வாழும் சாதாரண இல்லங்களை விற்பனை செய்வதைவிடுத்து, அவர்களுக்கு தேவையான வசதிகளை சிறப்பான முறையில் வடிவமைத்து அவர்களின் அனுபவத்தை அங்கு மேம்படுத்துவதையே குறிக்கோளாகக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

உயர்கல்வி சார்ந்த திட்டங்களில் பிரிஸ்டீஜ் குழுமம், தற்போது ஒரு பள்ளியை நிர்வகித்துவருகிறது. அதனையும் கடந்து பெருமை நிறைந்த, நிரந்தர புகழ்சேர்க்கக்கூடிய பல்கலைக்கழக மரபுடன் ஒரு கல்வி நிலையத்தை ஏற்படுத்துவதையே திரு இர்ஃபான் எதிர்பார்ப்பதாக விளக்கினார்.

இவைபோன்ற இலக்குகளை பிரிஸ்டீஜ் நிறைவுசெய்ய ஆசைப்படுகிறது என்றார் அவர்.

பெங்களூரில் அதன் தலைமை அலுவலகத்தைக் கொண்ட பிரிஸ்டீஜ் குழுமத்துக்கு, மேம்படுத்தப்பட்ட முதியோர் வாழ்விடங்களும், உயர்கல்வி நிலையமும் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளன.

குடியிருப்புகளில் இருந்து தொடங்கிய அதன் வர்த்தகப் பாதை, சில்லறை வியாபார இடங்கள், உபசரிப்புத் துறை மேம்பாடுகள் என 1986ஆம் ஆண்டில் நிறுவனம் தோன்றியதிலிருந்து படிப்படியாக வளர்ந்துவந்துள்ளது.

ஆரம்பத்தில் பெங்களூரில் ஒரு தையல் கடையில் அதன் பயணம் தொடங்கியது. அதனை திரு இர்ஃபான் ரசேக்கின் தந்தை திரு ரசேக் சட்டார் தோற்றுவித்தார்.

‘பிரிஸ்டீஜ் ஹவுஸ் ஃபார் மென்’ என்ற ஆண்களின் ஆடை, தையல் சேவைகளுக்கான சிறிய கடை நாளடைவில் இந்தியாவின் மிகப் பெரிய சொத்து மேம்பாட்டு நிறுவனமாக வடிவெடுக்க அடித்தளம் அமைத்தது.

இன்று யுபி சிட்டியின் நினைவுச் சின்னமாக உள்ள ஃபோரம் கொரமங்களா போன்ற பற்பல சில்லறை வர்த்தக வளாகங்கள், பிரிஸ்டீஜ் நிறுவனத்தின் நிர்வாகச் சிறப்பினை எடுத்துரைக்கின்றன. பிரிஸ்டீஜ் குழுமம் அதன் நிர்வாகத்தை மற்ற சந்தைகளிலும் விரிவுபடுத்தி அதன் முத்திரையைப் பதித்துவருகிறது.

அதன்பயனாக நிறுவனத்தின் அண்மைய தரவுகளின்படி, இவ்வாண்டு மார்ச் மாதம் முடிவடைந்த அதன் வர்த்தக ஆண்டின் வரவு S$4 பில்லியனை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அந்த அளவு வெற்றியை எட்டியிருந்தாலும் திரு இர்ஃபான் எதிர்காலத்தை கணிப்பது எளிதல்ல என்று குறிப்பிட்டார். “உலகம் மிக வேகமாக மாறிவருகிறது. எனவே அடுத்த நாள் என்ன நடக்கும் என்பதைக் கூட நாம் கூறமுடியாது.” என்றார்.

சொத்து முதலீட்டில் ஒரு யோசனையை வெற்றிகரமான வர்த்தகமாக மாற்றுவதற்கு பில்லியன் கணக்கில் முதலீடும் கணக்கற்ற திரும்பப் பெறவும் மாற்றியமைக்கவும் முடியாத பல முடிவுகளும் சம்பந்தப்பட்டுள்ளன. இந்தியாவின் முன்னணி சொத்து நிறுவனங்களில் ஒன்றை நிர்வகித்து வரும் திரு இர்ஃபானுக்கு அவையே மிக உற்சாகமானவையாக அமைந்துள்ளன.

நீடித்துநிலைக்கும் வளர்ச்சி, அடிப்படைகளை புரிந்துகொள்வதில் அடங்கியுள்ளது என்ற அவர் இந்தியாவின் சொத்துச் சந்தை சீராக ஒரே வகையில் அமைந்தது அல்ல என்று கூறினார்.

அவரது ஓய்வுக் காலங்களில் சுற்றுலா செல்வது, குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவது போன்றவற்றில் அவர் ஈடுபடுகிறார். உடல்நலனையும் மனநலனையும் ஆரோக்கியமாக வைப்பதில் அவர் கவனம் செலுத்துகிறார். தம்மைப் பழைமைவாதியாக வர்ணித்துக்கொண்ட திரு இர்ஃபான், வெள்ளித்திரையைவிட ஒரு புத்தகத்தையே தாம் விரும்புவதாக புன்னகையுடன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்