பெய்ஜிங்: சீனாவின் பல்வேறு இடங்களில் கொட்டித்தீர்த்த கனத்த மழையால் சாலைகள் கடுமையாகச் சேதமடைந்தன. அந்தச் சேதத்தின் மதிப்பு ஏறக்குறைய 16 பில்லியன் யுவென் ($2.9 பில்லியன்) என்று சீனப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே மந்தமடைந்துள்ள பொருளியல்மீதான நெருக்கடியைப் பருவநிலை மாற்றம் எவ்வாறு மோசமாக்கியுள்ளது என்பதை அது காட்டுவதாக அமைச்சு சுட்டியது.
வெள்ளம் தொடங்கியதிலிருந்து சாலைகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகப் போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார். 23 மாநிலங்கள், வட்டாரங்கள், நகர மன்றங்கள் ஆகியவற்றின் சாலைகளில் ஏற்பட்ட சேதங்கள் மதிப்பிடப்பட்டன.
சீனாவில் வெள்ளக் காலம் ஜூலை முதலாம் தேதி தொடங்கியது. நாட்டின் வடக்கிலும் தெற்கிலும் இதுவரை இல்லாத வகையில் மழை பெய்தது.
போக்குவரத்து அமைச்சு, நிதியமைச்சு ஆகியவை சாலைகளைப் பழுதுபார்க்க உள்ளூர் அதிகாரிகளுக்கு ஏறக்குறைய 540 மில்லியன் யுவென்னை வழங்கியுள்ளன.
வெள்ளம், நிலச்சரிவு, நிலநடுக்கம், வறட்சி ஆகிய பேரிடர்களைச் சமாளிக்க சீன அரசாங்கம் புதிதாக 5.8 பில்லியன் யுவென் நிதியை ஒதுக்கியது.
ஜூலை மாதத்தில் மட்டும் சீனப் பொருளியலுக்கு நேரடியாக 52.2 பில்லியன் யுவென் நேரடிப் பொருளியல் இழப்பு ஏற்பட்டது.

