ரோம்: ஐரோப்பாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாகப் பயணிகள் விமானங்களுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
இதனால் இத்தாலி, பிரான்ஸ், பல்கேரியா ஆகிய நாடுகளின் போர் விமானங்கள் அவசரமாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
விமான அச்சுறுத்தல்களுக்கு எவரும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ரோம், சோபியா விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட அச்சுறுத்தல்களில் பெண்களை இழிவுபடுத்தும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன; மேலும் அவை, ‘ஆண் தேசத்தின் போராளிகள்’ என்ற அமைப்பிடமிருந்து வந்ததாகக் கூறிக்கொண்டன. இங்கிலாந்தின் பர்மிங்ஹம், ஹீத்ரோ விமான நிலையங்களும் அத்தகைய அச்சுறுத்தலைப் பெற்றதாகத் தெரிவித்தன. ஏஎஃப்பி செய்தி நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டது.
பல்கேரியா, செக் குடியரசு, இத்தாலி ஆகிய நாடுகளுக்குச் சென்ற மற்றும் அங்கிருந்து புறப்பட்ட மலிவுக் கட்டண விமானங்கள் குறிப்பாகக் குறிவைக்கப்பட்டன.
ஏறக்குறைய 20 வணிக விமானங்கள் இந்த அச்சுறுத்தலை எதிர்கொண்டன. அவற்றில் குறைந்தபட்சம் ஐந்து விமானங்களுக்குப் போர் விமானங்கள் பாதுகாப்பு வழங்கி அழைத்துச் சென்றன. பல்கேரிய வான்படை மூன்று ரயான்ஏர் விமானங்களுக்குப் பாதுகாப்பு அளித்தது.
மிரட்டல் காரணமாக மூன்று விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன.
லண்டனிலிருந்து சோஃபியா சென்ற விமானம் பிளோவ்டிவ் நகருக்கும் மிலானிலிருந்து வார்சா சென்ற விமானம் வியன்னாவுக்கும் திருப்பிவிடப்பட்டன. எனினும், அனைத்து விமானங்களும் பாதுகாப்பாகத் தரையிறங்கின. விமானங்களை முழுமையாகச் சோதனையிட்ட அதிகாரிகள், அவற்றில் எந்தவொரு வெடிபொருளும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினர்.
டப்ளினிலிருந்து ரோம் நகருக்குச் சென்ற ஏர் லிங்கஸ் விமானம் ஒன்று, பிரெஞ்சுப் போர் விமானங்களால் இடைமறிக்கப்பட்டது. அந்த விமானம் பாரிசுக்கு மேற்கே உள்ள ராணுவத் தளத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அவ்விமானத்தின் விமானி, பொது விமான நிலையத்தை நாடியபோதிலும் பிரெஞ்சு பிரதமரின் உத்தரவின் பேரில் போர் விமானங்கள் அதனை வழிமறித்தன.
பதிவான சம்பவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையா என்பது குறித்து இப்போதே முடிவுக்கு வருவது சரியாக இருக்காது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் போக்குவரத்து ஆணையர் அப்போஸ்டோலோஸ் சிட்சிகோஸ்டாஸ், எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
புதன்கிழமை, 10 விமானங்களைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. அவை அனைத்துமே வெறும் புரளி என்பது பின்னர் தெரியவந்தது.
