புத்ரஜெயா: வெளிநாட்டவர் தாயகம் திரும்பும் திட்டம் 2.0ன் கீழ் பிப்ரவரி 23ஆம் தேதி நிலவரப்படி 100,000க்கும் மேற்பட்ட சட்டவிரோதக் குடியேறிகள் அவர்களின் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும், மலேசிய ரிங்கிட் 88 மில்லியனுக்கு மேல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று குடிநுழைவுத் தலைமை இயக்குநர் ஜகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.
இது, ஆவணமற்ற வெளிநாட்டவர் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளாமல் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கும் பொது மன்னிப்புத் திட்டமாகும். 2025 மே மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டம் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும்.
இதன் கீழ் இதுவரை 177,000 பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
“நடப்பில் இருக்கும் இத்திட்டம், அரசாங்க வருவாய்க்கு கணிசமாக பங்களித்துள்ளது. இன்றுவரை, நாங்கள் 88 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக வசூலித்துள்ளோம். ஏப்ரல் மாதத்துடன் இத்திட்டத்தைத் தொடர்வதா அல்லது முடித்துக்கொள்வதா என்பது குறித்து ஆராயப்படுகிறது,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
“பெயர் பதிய இனிமேல் முன்பதிவு தேவையில்லை. நேரில் வந்து பதிந்துகொள்ளலாம்,” என்றார் அவர்.
இந்தத் திட்டத்தின் கீழ், செல்லுபடியாகும் விசா, வேலை அனுமதி அட்டை இல்லாமல் மலேசியாவில் தங்கியிருப்பது அல்லது வேலை அனுமதி காலாவதி ஆன பின்னரும் தங்கியிருப்பது போன்ற குற்றங்களுக்காக 500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படுகிறது. அனுமதி அட்டை நிபந்தனைகளை மீறியதற்காக 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படுகிறது.
சில குற்றங்களுக்கான அபராதங்களைச் செலுத்துவதன் மூலம் அவர்களின் நிலையை ஒழுங்குபடுத்த அனுமதிக்கும் அதே நேரத்தில் வழக்குத் தொடுப்பதில் இருந்து சட்டவிரோதக் குடியேறிகளுக்கு விலக்கு அளிக்கும் ஒரு பொது மன்னிப்புத் திட்டமாகும்.

