தென்கிழக்காசியாவில் மின்சார கார் விற்பனை அதிகரிப்பு

எரிபொருள் விலை உயர்வு எதிரொலி

தென்கிழக்காசியாவில் மின்சார கார் விற்பனை அதிகரிப்பு

2 mins read
f575dd19-df76-49ab-893d-f79a368a9e0c
ஆண்டு அடிப்படையில், வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின்வாகன விற்பனை 127 விழுக்காடு கூடி, 2026 மார்ச்சில் 27,600 கார்களை எட்டியது. - படம்: இபிஏ
multi-img1 of 2

ஹனோய்: ஈரான் போர் காரணமாக எரிபொருள் விலை கூடியுள்ளதை அடுத்து, தென்கிழக்காசிய வட்டாரத்தில் மின்வாகன விற்பனை அதிகரித்துள்ளது.

வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளதால் ஆசிய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனை ஈடுகட்டுவதற்கான மாற்றுவழிகளும் அதிகமாக இல்லை.

இதனால், வியட்னாமின் ‘வின்ஃபாஸ்ட்’ மின்வாகன உற்பத்தி நிறுவனமும் சீன மின்வாகன நிறுவனங்களும் பயனடைந்து வருகின்றன.

பெட்ரோல், டீசல் போன்றவற்றுக்கான செலவு கூடிவிட்டதால் மின்சார கார் விற்பனையகங்களுக்குப் படையெடுப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வீட்டில் பெட்ரோலில் இயங்கும் கார் இருக்கும் நிலையில், பணத்தை மிச்சப்படுத்துவதற்காக மின்கார் வாங்குவது குறித்துச் சிந்தித்து வருவதாகக் கூறினார் வியட்னாமிய அலுவலக ஊழியரான டோ தி லான்.

அதுபோல, பள்ளி ஆசிரியரான டாவ் தி ஹியூவும் அதே முடிவில் இருக்கிறார்.

“பெட்ரோலிய காரைவிட மின்கார் ஓட்டுவது நன்றாக இருக்கிறது. செலவு, எரிபொருள் போன்ற வழிகளிலும் அதுவே மேம்பட்டதாக உள்ளது,” என்கிறார் அவர்.

ஈரான் போரை அடுத்து கிட்டத்தட்ட 50 விழுக்காடு கூடிய கச்சா எண்ணெய் விலை, திங்கட்கிழமை (ஏப்ரல் 13) பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலரைத் தாண்டியது.

இந்நிலையில், ஆண்டு அடிப்படையில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின்வாகன விற்பனை 127 விழுக்காடு கூடி, 2026 மார்ச்சில் 27,600 கார்களை எட்டியது.

சென்ற ஆண்டில் மட்டும் வியட்னாமில் விற்ற கார்களில் 40 விழுக்காடு மின்கார்கள் என்றும் அப்போக்கு மேலும் வேகம் பெற்று வருகிறது என்றும் ஏஎஃப்பி செய்தி தெரிவித்தது.

அதுபோல, டெஸ்லாவின் முதன்மை எதிரியாகக் கருதப்படும் சீனாவின் பிஒய்டி நிறுவனத்தின் மின்கார் விற்பனையும் அதிகரித்து வருகிறது.

தாய்லாந்திலும் பிலிப்பீன்சிலும் பிஒய்டி கார்கள் அதிக அளவில் விற்று வருகின்றன.

“எரிபொருள் விலை கூடியதே இதற்கு முக்கியக் காரணம்,” என்கிறார் மணிலாவிலுள்ள பிஒய்டி விற்பனையகம் ஒன்றின் மேலாளர் மே ஆன் கிளாரிசே பக்குவினோ.

சீனாவில் பிஒய்டி மின்கார் விற்பனை குறைந்துள்ளபோதும் இவ்வாண்டில் மட்டும் 1.5 மில்லியன் கார்களை ஏற்றுமதி செய்ய முடியும் என்பது அந்நிறுவனத்தின் எதிர்பார்ப்பு.

இதனிடையே, எரிபொருள் பயன்பாடு அதிகமாக இருப்பதால் தேசிய மினவாகனச் சுற்றுச்சூழல் அமைப்பை ஏற்படுத்துவதை முடுக்கிவிடத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இந்தோனீசியா கடந்த வாரம் உறுதியளித்தது.

தென்கிழக்காசியாவுக்கு அப்பாலும் மின்வாகனங்கள் கவனம் பெறத் தொடங்கியுள்ளன.

ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் மின்வாகனங்களுக்கான பதிவு 50 முதல் 200 விழுக்காடுவரை கூடியுள்ளது.

குறிப்புச் சொற்கள்