ஜகார்த்தா: இந்தோனீசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் திரவ இயற்கை எரிவாயுவைச் சிங்கப்பூர் பிற நாடுகளுக்கு மறுவிற்பனை செய்வதாக இந்தோனீசிய மூத்த அமைச்சர் பஹ்லில் லகடாலியா குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜகார்த்தாவில் அதிபர் பிரபோவோ சுபியாந்தோவைச் சந்தித்த பின்னர் வியாழக்கிழமை (அக்டோபர் 29) செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்ட 148 திரவ எரிவாயுக் கப்பல் சரக்குகளில் சில மறுஏற்றுமதி செய்யப்படுவதாகத் தெரிவித்தார். ஆயினும், அதற்கான நம்பகமான சான்றுகளை அவர் முன்வைக்கவில்லை. இது கடல்வழியாகக் கொண்டுசெல்லப்படும் திரவ எரிவாயு பற்றியதாகும்.
முன்னதாக, அக்டோபர் 24ஆம் தேதி, உள்நாட்டுத் தேவையை முன்னிட்டுச் சிங்கப்பூருக்கான குழாய்வழி எரிவாயு ஏற்றுமதியை இந்தோனீசியா குறைத்தது. இந்த விநியோகக் குறைப்பு சிங்கப்பூரின் அன்றாட எரிவாயுத் தேவையில் இரண்டு விழுக்காட்டிற்கும் குறைவான அளவு என்று சிங்கப்பூர் எரிசக்திச் சந்தை ஆணையம் தெரிவித்தது.
வணிகக் கடப்பாடுகள் மதிக்கப்பட வேண்டும் என்று அக்டோபர் 25ஆம் தேதி பிரதமர் லாரன்ஸ் வோங் கூறிய நிலையில், தங்களுக்கு யாரும் போதிக்கத் தேவையில்லை என்று திரு பஹ்லில் பதிலளித்தார்.
இந்நிலையில், எரிவாயு விநியோகம், எல்லை தாண்டிய புகைமூட்டம் தொடர்பான பதற்றங்களைத் தணிக்க இருநாட்டு அதிகாரிகளும் வணிகத் தலைவர்களும் அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
புகைமூட்ட விவகாரங்கள் நிலவினாலும், சிங்கப்பூரின் நேரடி முதலீட்டு உறுதிப்பாடுகள் உறுதியாக இருப்பதாக இந்தோனீசிய முதலீட்டு அமைச்சர் ரோசான் ரோஸ்லானி கூறினார். சிங்கப்பூருடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்க எவ்விதக் காரணமும் இல்லை என்று இந்தோனீசிய தேசியப் பொருளியல் மன்றத் தலைவர் லுகுட் பின்சார் பாண்ட்ஜாய்தான் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, சிங்கப்பூர் இணைய இணைப்பைத் துண்டிக்கக்கூடும் என்று முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் கெல்வின் செங் கருத்துரைத்ததற்கு மத்தியில், நிதானம் காக்குமாறு இந்தோனீசியத் தொடர்பு, மின்னிலக்க விவகார அமைச்சர் மேயுட்யா ஹஃபீது கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, அக்டோபர் 27 முதல் 29 வரை இந்தோனீசியா சென்ற சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், அந்நாட்டு அதிபர் பிரபோவோவைச் சந்தித்துப் பேசினார். எல்லை தாண்டிய புகைமூட்டத்தைக் கட்டுப்படுத்த கூட்டுப் பணிக்குழுவை அமைத்து, அணுக்கமான இருதரப்பு உறவுகளைத் தொடர்ந்து நிலைநிறுத்த இரு நாடுகளும் உறுதியேற்றுள்ளன.
