சமரசப் பேச்சு நடத்துவதாக டிரம்ப் கூறியதை மீண்டும் நிராகரித்தது ஈரான்

சமரசப் பேச்சு நடத்துவதாக டிரம்ப் கூறியதை மீண்டும் நிராகரித்தது ஈரான்

2 mins read
dfdb4685-2434-402b-9914-b59c7d620dbe
டெல் அவிவின் கிழக்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) தாக்குதலுக்கு உள்ளான கட்டடம். - படம்: ஏஎஃப்பி

கைரோ: போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்துப் பேச்சு நடத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருப்பதை ஈரான் மீண்டும் புதன்கிழமை (மார்ச் 25) நிராகரித்துள்ளது. அமெரிக்கா தனக்குத் தானே பேசிக்கொள்வதாக ஈரானிய ஆயுதப் படை சொன்னது.

“உங்களின் மனப்போராட்டம், நீங்கள் (டிரம்ப்) உங்களுக்குள்ளேயே பேச்சும் நடத்தும் நிலைக்குக் கொண்டுவந்துள்ளதா?” என்று ஈரானின் கூட்டு ராணுவத் தளபத்தியத்திற்கான மூத்த பேச்சாளர் இப்ராகிம் ஸொல்ஃபக்காரி அந்நாட்டின் அரசாங்கத் தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.

“எங்களைப் போன்ற மக்கள் உங்களைப் போன்றோருடன் இப்போதல்ல, எப்போதுமே ஒத்துப்போக முடியாது,” என்றார் அவர்.

கடந்த ஈராண்டில் உயர்நிலைப் பேச்சு நடைபெற்ற நேரத்திலேயே அமெரிக்கா இரண்டு முறை தாக்கியதால் அதனுடன் சமரசப் பேச்சில் ஈடுபட முடியாது என்று ஈரானின் தலைமைத்துவம் ஏற்கெனவே கூறியிருந்தது.

ஈரான் போர் தொடங்கி மூன்று வாரத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் மாண்டுவிட்டனர்; ஏராளமானோர் காயமுற்றனர்; எரிசக்தித் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட அதிர்ச்சி, வரலாறு காணாத அளவுக்கு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது; உலக அளவில் விலைவாசி உயர்வு அச்சத்தை உண்டாக்கியிருக்கிறது.

இந்நிலையில் இஸ்ரேலும் ஈரானும் ஒன்று மற்றொன்றிற்கு எதிராக புதன்கிழமை (மார்ச் 25) வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றன.

டெஹ்ரானில் உள்கட்டமைப்பைக் குறிவைத்துத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக இஸ்ரேலியத் தற்காப்புப் படை டெலிகிராம் பதிவில் கூறியது.

டெல் அவிவ், கிர்யாட் ‌‌ஷமோனா உள்ளிட்ட இஸ்ரேலிய நகரங்களில் புதிய தாக்குதல்களைத் தொடுத்திருப்பதாக ஈரானின் புரட்சிக் காவற்படை தெரிவித்தது. அத்துடன் குவைத், ஜோர்தான், பஹ்ரைன் நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் தாக்கப்பட்டதாகவும் ஈரானின் அரசாங்க ஊடகம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்