டெஹ்ரான்: ஈரானில் உள்ள இரண்டு எரிவாயு நிலையங்கள், ஒரு குழாய் இணைப்பைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) தெரிவித்தது.
இஸ்ரேலும் அமெரிக்காவும் நடத்திய தாக்குதல்களுக்கு அவை உள்ளானதாக ஈரானிய ஊடகம் செய்தி வெளியிட்டது. இதற்கு சில மணிநேரத்துக்கு முன்புதான் ஈரானின் எரிசக்திக் கட்டமைப்பைத் தாக்கக்கூடும் என்ற தனது மிரட்டலிலிருந்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பின்வாங்கியிருந்தார்.
மத்திய ஈரானில் உள்ள அந்த எரிவாயு வசதிகள் பாதி சேதமடைந்ததாக ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
இத்தகவல் தங்களுக்கு எப்படி கிடைத்தது என்ற விவரத்தை ஃபார்ஸ் குறிப்பிடவில்லை. ஈரானில் ஃபார்ஸ் மட்டும்தான் இச்செய்தியை வெளியிட்டது.
தாக்குதலில் எரிவாயுக் குழாய் ஒன்றும் தாக்கப்பட்டதாகத் தெரிவித்த அப்பகுதியின் ஆளுநர், எரிசக்திக் கட்டமைப்பு இயல்புநிலையில் செயல்பட்டு வருவதாகவும் எரிவாயு விநியோகத்துக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றும் கூறினார்.
ஈரான் தொடர்பான விவகாரம் நன்றாகச் சென்றுகொண்டிருந்ததாக திரு டிரம்ப் திங்கட்கிழமை (மார்ச் 23) ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார்.
டெஹ்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவித்ததோடு ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்குவதை ஐந்து நாள்களுக்கு நிறுத்தப்போவதாக அறிவித்த சிறிது நேரம் கழித்து திரு டிரம்ப் அவ்வாறு கூறினார்.

