சீனாவில் ஜப்பானியர்களுக்குக் கூடுதல் பாதுகாப்புக்கு அழைப்பு விடுத்த தூதர்

1 mins read
10 வயது ஜப்பானிய மாணவன் கத்திக்குத்தால் மாண்டதை அடுத்து வெளியான கோரிக்கை
78f92c3c-dcf0-4cb8-b5ae-b2b9eb095925
10 வயதுச் சிறுவன் கொல்லப்பட்டதை அடுத்து ஷென்செனில் உள்ள ஜப்பானியப் பள்ளிக்கு அருகே செப்டம்பர் 19ஆம் தேதி, அஞ்சலி செலுத்தும் விதமாக மலர்க்கொத்துகள் வைக்கப்பட்டிருந்தன. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: சீனாவில் ஜப்பானியர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு தேவை என்று சீனாவுக்கான ஜப்பானியத் தூதர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஷென்செனில் அண்மையில் 10 வயது ஜப்பானியச் சிறுவன் கத்திக்குத்தால் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து அவரது கோரிக்கை வெளியாகியுள்ளது.

சீனாவுக்கான ஜப்பானியத் தூதர் கென்ஜி கனாசுகி, இச்சம்பவம் தொடர்பில் சீன வெளியுறவுத் துணை அமைச்சர் சுன் வெய்டோங்குடன் தொலைபேசி வாயிலாக உரையாடியதாக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனத் துணை அமைச்சரின் பதில் குறித்து மேல்விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இருப்பினும், சீனாவிற்குள் ஜப்பானியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையானதைச் செய்யும்படிச் சீன அரசாங்கத்திடம் ஜப்பான் வலியுறுத்தியதாக அந்த அறிக்கை கூறுகிறது.

சிறுவன் கத்திக்குத்துக்கு ஆளான சம்பவம் குறித்த விவரங்களை வழங்கும்படியும் ஜப்பான் சீனாவை வலியுறுத்தியதாக அது குறிப்பிட்டது.

தாக்கப்பட்ட சிறுவன், வியாழக்கிழமை (செப்டம்பர் 19) காலை உயிரிழந்தான். புதன்கிழமை காலை 8 மணியளவில் அவன் பள்ளிக்குச் செல்லும் வழியில் 44 வயதுத் தாக்குதல்காரர் சிறுவனைக் கத்தியால் குத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பதற்றம் நிலவும் வேளையில், அண்மை மாதங்களில் சீனாவில் உள்ள ஜப்பானியக் கல்வி நிலையங்களுக்கு அருகே பள்ளி மாணவர்களைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது தாக்குதல் அது.

குறிப்புச் சொற்கள்