மலேசியா: வாகன நிறுத்தச் செயலிகள்மீது இணையத் தாக்குதல்

மலேசியா: வாகன நிறுத்தச் செயலிகள்மீது இணையத் தாக்குதல்

1 mins read
99ab9fad-14cc-4190-9d11-dfb491f982ad
கடந்த ஜூன் 30ஆம் தேதி நடத்தப்பட்ட இணையத் தாக்குதலால் ‘ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங்’, ‘ஃபிளெக்ஸி பார்க்கிங்’ என்ற இரு செயலிகளும் முடங்கின. - மாதிரிப்படம்: பிக்சாபே

பெட்டாலிங் ஜெயா: இணையத் தாக்குதல் காரணமாகக் கடந்த மூன்று நாள்களாகப் பாதிப்பிற்குள்ளான மலேசியாவின் சிலாங்கூர் மாநில மின்னிலக்க வாகன நிறுத்துமிடக் கட்டணச் செயலி முழுமையாகச் சீரமைக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்களது சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும், வாகன நிறுத்துமிடக் கட்டணப் பரிவர்த்தனைகளும் அதற்கான செயலாக்க நடவடிக்கைகளும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியுள்ளதாகவும் ‘சிலாங்கூர் இன்டெலிஜென்ட் பார்க்கிங்’ நிறுவனம் வியாழக்கிழமை (ஜூலை 2) ஓர் அறிக்கைமூலம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 30ஆம் தேதி நடத்தப்பட்ட இணையத் தாக்குதலால் ‘ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங்’, ‘ஃபிளெக்ஸி பார்க்கிங்’ என்ற இரு செயலிகளும் முடங்கின.

இதனால், சிலாங்கூரிலும் அதே தளத்தைப் பயன்படுத்தும் பிற பகுதிகளிலும் வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்தனர்.

இதனிடையே, இதே போன்றதொரு பாதிப்பை எதிர்கொண்ட ‘சாபா ஸ்மார்ட் பார்க்கிங்’ செயலியும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இணையத் தாக்குதல் காரணமாகக் கோத்தா கினபாலு மாநகராட்சி தங்களது வாகன நிறுத்தக் கட்டணச் செயலாக்க நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. பயனர்களால் செயலியைப் பயன்படுத்த முடியாத சூழல் நிலவியதால், வாகன ஓட்டிகளுக்கு எவ்வித அபராதமும் விதிக்கப்படாது என்று மாநகராட்சி தெரிவித்திருந்தது.

அதுகுறித்து தீவிர விசாரணை நடத்த தேசிய இணையப் பாதுகாப்பு முகமையிடமும் மலேசியத் தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையத்திடமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சாபா மாநிலக் குழுத் தலைவர் இங் சுவீ லிம் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்