கோலாலம்பூர்: மலேசியாவில் மருத்துவப் படிப்பைப் முடிக்கும் புதிய பட்டதாரிகள் சிங்கப்பூரை நோக்கி ஈர்க்கப்படுவதால் அந்நாட்டின் பொதுச் சுகாதாரத் துறை பணியாளர் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.
இந்த ஆண்டு ஜனவரியில் சுகாதார அமைச்சு வழங்கிய 5,000 பயிற்சி மருத்துவப் பணியிடங்களில், வெறும் 529 பேர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 10.5 விழுக்காடு மட்டுமே என்று எம்பிஎஸ்பி எனப்படும் மலேசியாவின் முக்கிய நிதி நிறுவனத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது.
“அந்தக் குடியரசைச் சேர்ந்த ஆள்சேர்ப்பு முகவர்கள், மருத்துவ மாணவர்கள் பணி அனுபவம் பெறும் வரை காத்திருக்காமல், தற்போது இறுதி ஆண்டு மாணவர்களை நேரடியாகக் குறி வைக்கின்றனர். ‘சிறந்த உள்ளூர் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள், தங்களது இறுதி மருத்துவப் படிப்பிற்கான (MBBS) தேர்வுகளை எழுதுவதற்கு முன்பே ஆள்சேர்ப்பு முகவர்கள் அவர்களை அணுகுகின்றனர்,” என்று அந்த ஆய்வுக் குறிப்பு தெரிவிக்கிறது.
சம்பள வேறுபாடு, நிரந்தரப் பணி போன்றவையே மலேசிய மருத்துவர்கள் சிங்கப்பூரை நோக்கி படையெடுக்க முக்கியக் காரணங்களாக மாறியுள்ளன.
சிங்கப்பூருக்குச் செல்லும் மலேசிய மருத்துவப் பட்டதாரிகள்
சிங்கப்பூரின் ஆள்சேர்ப்பு முகவர்கள் இப்போது மலேசியாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்களான மலாயா பல்கலைக்கழகம், மலேசியத் தேசியப் பல்கலைக்கழகம், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களையே நேரடியாக அணுகத் தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக, மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் படிப்பிற்குச் சிங்கப்பூர் மருத்துவ மன்றம் அங்கீகாரம் அளித்ததைத் தொடர்ந்து, அங்கிருந்து வெளிநாடு செல்லத் தகுதியான மாணவர்களின் எண்ணிக்கை 30 முதல் 40 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.
சிங்கப்பூர் ஆண்டுக்குக் கிட்டத்தட்ட $110,000 வெள்ளி (ஏறக்குறைய 385,000 மலேசிய ரிங்கிட்) வழங்குகிறது. இது மலேசிய சுகாதார அமைச்சு வழங்கும் தொடக்க ஊதியத்தை விட ஐந்து முதல் ஆறு மடங்கு அதிகமாகும்.
மலேசியாவில் நிலவும் தற்காலிக ஒப்பந்த முறைக்குப் பதிலாக, சிங்கப்பூரில் நிரந்தரப் பணி, ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படுவது மாணவர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் மலேசியாவில், அரசாங்க மருத்துவர்களின் ஆரம்ப சம்பளமே மாதத்திற்கு ஏறக்குறைய 5,000 ரிஙகிட் மட்டுமே.
மலேசியப் பொருளியலையும் சுகாதாரக் கட்டமைப்பையும் பாதிக்கும் இந்த மூளைச் சலவைச் சிக்கலைத் தீர்க்க, ஒப்பந்த முறையை ஒழித்து மீண்டும் நிரந்தரப் பணி நியமனங்களைக் கொண்டுவரும் புதிய திட்டத்தைச் சுகாதார அமைச்சு 2026 இறுதிக்குள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

