பாடாங் பெசார்: அரசாங்க அஞ்சல் சேவை மூலம் நோயாளிகளுக்கு மருந்துகளை அஞ்சல் கட்டணமின்றி விநியோகிக்கும் திட்டத்தில் மலேசியச் சுகாதார அமைச்சுக்குத் (எம்ஓஹெச்) தகவல் தொடர்பு அமைச்சு உதவி வழங்கும். மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) மூலம் இந்த இலவச அஞ்சல் விநியோகத் திட்டம் செயல்படுத்தப்படும்.
அந்தச் சேவையைத் தெரிவு செய்வோருக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் அந்த வசதி செய்துகொடுக்கப்படும். அதன்படி மருந்துகளை விநியோகிப்பதற்கான அஞ்சல் கட்டணத்தை நோயாளிகள் செலுத்தத் தேவையில்லை.
மலேசிய-தாய்லாந்து எல்லை அருகில் உள்ள பெர்லிஸ் மாநிலத்தின் பாடாங் பெசார் பகுதியில் உள்ள சுகாதார மருந்தகத்தில் தேசிய மின்னிலக்கச் சுகாதாரச் சூழலமைப்பு, இணைப்புத்திறன் திட்டத்தைப் பார்வையிட சனிக்கிழமை (செப்டம்பர் 26) சென்றிருந்தபோது மலேசியத் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாமி ஃபட்சில் செய்தியாளர்களைச் சந்தித்துக் கருத்துரைத்தார்.
இதற்கு முன்பாக நோயாளிகள் மருந்துகளைப் பெறுவதற்கான அஞ்சல் கட்டணங்களைச் செலுத்தவேண்டியிருந்தது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் எம்சிஎம்சி அமைப்பு அரசாங்கத்தின் ஆதரவுடன் அந்தச் செலவை ஏற்றுக்கொள்ளும் என்றார் அமைச்சர்.
தகவல் தொடர்பு அமைச்சின் தலைமைச் செயலாளரும் பெர்லிஸ் மாநிலச் சுகாதார இயக்குநருமான அப்துல் ஹலிம் ஹம்சாவும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
ஒரு மாதத்தில் 80,000 நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கும் திட்டத்துக்கான செலவை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று இவ்வாண்டு ஜூன் மாதம் அமைச்சர் ஃபாமி அறிவித்திருந்தார். அதன்படி அஞ்சல் வழியாக மருந்து விநியோகம் (யூஎம்பி) என்ற திட்டத்தின்கீழ் மலேசியச் சுகாதார அமைச்சும் தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையமும் ஒருங்கிணைந்துள்ளன.
