வெள்ளத்தால் சிலாங்கூரில் வீடுகளிலிருந்து வெளியேறியோர் எண்ணிக்கை இரட்டிப்பு

வெள்ளத்தால் சிலாங்கூரில் வீடுகளிலிருந்து வெளியேறியோர் எண்ணிக்கை இரட்டிப்பு

1 of 2
படம்: பெர்னாமா
படம்: பெர்னாமா

09 Nov 2026 - 8:02 pm

2 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ளத்தால் வீடுகளிலிருந்து வெளியேறியோரின் எண்ணிக்கை இருமடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது.

அதேவேளை, பேராக் மாநிலத்தில் நிலைமை சற்று மேம்பட்டதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது. திங்கட்கிழமை (நவம்பர் 9) பிற்பகல் நிலவரப்படி இரு மாநிலங்களிலும் மொத்தம் ஆறு தற்காலிக முகாம்களில் 1,002 பேர் இருக்கின்றனர்.

சிலாங்கூரில் திங்கட்கிழமை பிற்பகல் 3.40 மணி நிலவரப்படி தற்காலிக முகாம்களில் வசிப்போரின் எண்ணிக்கை 583க்கு அதிகரித்தது. அவர்கள் 163 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். திங்கட்கிழமை காலை அந்த எண்ணிக்கை, 55 குடும்பங்களைச் சேர்ந்த 215ஆகப் பதிவாகியிருந்தது.

அந்த மாநிலத்தில் வீடுகளிலிருந்து வெளியேறியவர்கள் கோலா சிலாங்கூரில் உள்ள நான்கு தற்காலிக முகாம்களில் இருப்பதாக சமூக நலன் பிரிவின் (ஜேகேஎம்) இன்ஃபோபென்சானா தளத்தில் தெரிவிக்கப்பட்டது.

பேராக்

பேராக்கில் இரு ஆறுகளில் நீரின் அளவு அபாயக் கட்டத்தைத் தாண்டியது. தாஞ்சுங் துவாலாங்கில் உள்ள சுங்கை கிந்தா, சாங்காம் ஜோங் ஆகிய ஆறுகளில் நீரின் அளவு அபாயக் கட்டத்தைத் தாண்டியது.

பேராக்கின் ஹிலிர் பேராக் பகுதியில் வீடுகளிலிருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தது. திங்கட்கிழமை காலை அங்கு 130 குடும்பங்களைச் சேர்ந்த 439 பேர் வீடுகளிலிருந்து வெளியேறியிருந்தனர். அந்த எண்ணிக்கை பின்னர் 124 குடும்பங்களைச் சேர்ந்த 419 பேராகக் குறைந்தது.

நிதியுதவி

இதற்கிடையே, சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒருமுறை அளிக்கப்படும் சிறப்பு உதவித் தொகையாக 2,500 ரிங்கிட் (788 வெள்ளி) ரொக்கம் வழங்கப்படும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் திங்கட்கிழமை அறிவித்தார். செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) முதல் அத்தொகை விநியோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளத்தால் சேதமடைந்த அல்லது அழிந்துபோன அத்தியாவசியப் பொருள்களை மீண்டும் நிரப்ப பாதிக்கப்பட்ட குடிமக்களுக்கு உதவுவது இந்நடவடிக்கையின் நோக்கம் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நடவடிக்கையைச் செயல்படுத்துவது, நிதியுதவிக்கு தகுதியுடையோர் ஆகிய விவரங்களைச் சம்பந்தப்பட்ட அமைப்பு தெரிவிக்கும்.

மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் மீண்டும் வெள்ளம் ஏற்படும் பிரச்சினையைக் கையாள வெள்ளத் தடுப்புத் திட்டங்களைத் துரிதமாகச் செயல்படுத்துமாறு திரு அன்வார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்