தட்டம்மையால் 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்ளாதேஷில் மரணம்

தட்டம்மையால் 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்ளாதேஷில் மரணம்

படம்: ஏஎஃப்பி

17 Sep 2026 - 9:26 pm

2 mins read

டாக்கா: பல ஆண்டுகளில் காணப்படாத அளவு பங்ளாதேஷில் தட்டம்மைத் தொற்று பரவிவருகிறது.

அதனை எதிர்கொள்ள அங்குள்ள மருத்தவத் துறை தடுமாற்றம் அடைந்துள்ளது.

இதுவரையில் அங்கு 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணமடைந்துவிட்டனர். அவசரநிலையில் பங்ளாதேஷில் தடுப்பூசி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் இது நிகழ்ந்துள்ளது. அதோடு தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

பங்ளாதேஷில் 19.8 மில்லியன் குழந்தைகளுக்குத் தடுப்பூசிகள் போடப்பட்டுவிட்டன. ஆயினும் புதிதாக 1,000 குழந்தைகளுக்குத் தொற்று ஏற்பட்டதாக அன்றாடம் பதிவுகள் செய்யப்படுகின்றன.

தடுப்பூசிகளைப் பெறாத குழந்தைகளைச் சென்றடைய, செப்டம்பர் 26ஆம் தேதி அரசாங்கம் தீவிரமாக நடவடிக்கைகளை முடுக்கிவிடப்போவதாக ஐக்கிய நாட்டு அனைத்துலகக் குழந்தைகள் அவசரகால நிதியம் (யுனிசெஃப்) பிபிசி ஊடகத்திடம் தெரிவித்தது.

தட்டம்மைத் தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இவ்வாண்டு மார்ச் மாதம் வரையில் பங்ளாதேஷ் நல்ல முன்னேற்றம் அடைந்துவந்தது என்று குறிப்பிட்ட நிதியம், உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு அங்கு தொற்று தற்போது அதிகரித்துள்ளதாக அதன் தரவுகள் காட்டுவதாக எச்சரித்தது.

மூச்சு விடுதல், இருமல், தும்மல் போன்ற மனித வழக்கத்தால் அந்தத் தொற்று எளிதாகப் பரவுகிறது. மார்ச் மாதம் முதல் 194,000 நோயாளிகள் தட்டம்மைத் தொற்றால் மரணமடைந்துவிட்டனர் என்று யுனிசெஃப் தெரிவித்தது.

ஆக அண்மையாகத் தட்டம்மைத் தொற்றால் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) எட்டு நோயாளிகள் மரணமடைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

178 மில்லியன் மக்கள்தொகை கொண்ட தெற்காசிய நாடான பங்ளாதேஷில் பல காரணங்களால் தட்டம்மைத் தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் தட்டம்மைத் தடுப்பூசித் திட்டங்கள் தடைபட்டிருந்தது முக்கிய காரணங்களில் ஒன்று. .

இதற்கிடையே முகம்மது யூனோஸ் தலைமையில் ஆட்சியில் இருந்த முன்னாள் அரசாங்கம் கடந்த ஆண்டில் நடைபெறவிருந்த தடுப்பூசி திட்டங்களுக்குத் தேவையான மருந்துகளை வரவழைப்பதில் தாமதம் செய்தது அதற்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிட்டது என்று அந்த ஐக்கிய நாட்டு அமைப்பு குற்றஞ்சாட்டியது.

குறிப்புச் சொற்கள்
பங்ளாதே‌ஷ்தட்டம்மைதொற்றுதொற்றுநோய் அமைப்புமருத்துவம்மருத்துவமனைநோயாளிஅரசாங்கம்சிகிச்சை