சியங்மாய் நகர் பௌத்த ஆலயக் கோபுரம் சரிந்து விழுந்தது

சியங்மாய் நகர் பௌத்த ஆலயக் கோபுரம் சரிந்து விழுந்தது

படம்: த நேஷன் / ஆசியா நியூஸ் நெட்வொர்க்

03 Nov 2026 - 8:44 pm

1 mins read
Watch on YouTube

சியங்மாய்/தாய்லாந்து: தாய்லாந்தின் சியங்மாய் நகரின் டோய் லோ மாவட்டத்தில் உள்ள வாட் மாய் நொங் ஹொய் பௌத்த ஆலயத்தின் ‘பகோடா’ கோபுரத்தின் கட்டமைப்பில் ஏற்பட்ட சிதைவினால் அதன் மேற்பாகம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) காலை திடீரென சரிந்து விழுந்தது.

அந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆயினும் மீண்டும் கோபுரத்தின் இதர பாகங்கள் விழும் அபாயம் உள்ளதால், பாதுகாப்புக் கருதி விபத்துகளைத் தவிர்க்க அந்த வளாகத்தை யாரும் நெருங்காதபடி அதிகாரிகள் தடுப்புகளைக் கொண்டு அடைத்துள்ளனர். அதனை உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த மாவட்ட பௌத்த சமய நிர்வாக அதிகாரிகள், அன்றைய தினம் காலை 9.30 மணியளவில் கட்டமைப்பில் நிகழ்ந்த கோளாறு குறித்து அவசர அறிக்கை ஒன்றை வெளியிட்டனர் என்று ஊடகங்கள் தெரிவித்தன.

கோபுரத்தின் மேற்பாகம் சாய்ந்ததால், அதன் வளாகத்தில் செங்கற்கள், கான்கிரீட் கற்கள் போன்றவை சிதறிக் கிடக்கின்றன.

ஆலயத்தைச் சுற்றி பேரொலியோடு கோபுரத்தின் மேற்பாகம் சாய்ந்தது, காணொளியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அரசாங்க அதிகாரிகளும், மாவட்ட சமயத் தலைவர்களின் அலுவலகமும் அவசரகாலப் படையினரும் உடனடியாக அந்த வளாகத்தை சுற்றிவளைத்து பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்தினர்.

பொறியாளர்களும் கட்டட நிபுணர்களும் எஞ்சியுள்ள கோபுரத்தின் கீழ்பாகத்தைச் சோதனையிடுகின்றனர். கோபுரத்துக்கு ஏற்பட்ட சேதம் ஆய்வு செய்யப்பட்டு, அது ஏன் சரிந்தது என்பதற்கான விசாரணை தொடர்கிறது. தொழில்நுட்ப ஆய்வுகள் முடிந்ததும் மேல் விவரங்கள் வெளியிடப்படும்.

குறிப்புச் சொற்கள்