சீன ஊடகம் அவமானப்படுத்தியதாக பிலிப்பீன்ஸ் குற்றச்சாட்டு

சீன ஊடகம் அவமானப்படுத்தியதாக பிலிப்பீன்ஸ் குற்றச்சாட்டு

2 mins read
25fc6ebe-d0ec-425a-aacc-e494c6ac7cbe
அண்மையில் தென்சீனக் கடலில் சீனா உரிமை கொண்டாட சட்டப்படி எந்த அடிப்படையும் இல்லை என பதினான்கு நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டன. - படம்: ராய்ட்டர்ஸ்

மணிலா: சீன அரசின் நாளிதழ் ஒன்று, செயற்கை நுண்ணறிவைக் கொண்டு தயாரித்த காணொளியில் பிலிப்பீன்ஸ் மக்களைக் குரங்குகளைப் போல சித்திரித்து இனவாதக் கருத்துகளை வெளியிட்டதோடு தமது நாட்டு மக்களின் மனத்தைப் புண்படுத்தியதாகப் பிலிப்பீன்ஸ் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

அச்செயலை ஏற்கமுடியாது என்று கண்டித்ததோடு மனிதத்தன்மையற்ற பொய்ப் பிரசாரம் என்று பிலிப்பீன்ஸ் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. அதன் விவரங்களைப் பிலிப்பீன்ஸ் தற்காப்பு அமைச்சு வியாழக்கிழமை (ஜூலை 16) வெளியிட்டது.

அந்தச் சீன நாளிதழ் ஜூலை 10ஆம் தேதி அதன் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவை உடனடியாக அகற்றவேண்டும் என்று பிலிப்பீன்ஸ் கோரிக்கை விடுத்தது. மணிலாவில் இயங்கும் சீனத் தூதரகம் எவ்விதக் கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை.

அந்தக் காணொளியில் பிலிப்பீன்ஸ் நாட்டு உடை அணிந்த குரங்கு அமெரிக்கா, ஜப்பான் ஆகிய இருநாடுகளையும் பிரதிநிதிக்கும் இரண்டு கைகள் காட்டும் அசைவுகளுக்கு ஏற்ப பாடல் பாடுவதற்கு வழிகாட்டப்படுகிறது.

பிறகு ‘முட்டாள்’ என்று அக்குரங்கு திட்டப்படுகிறது. பின் அதன் கைகளில் இருந்த ‘தென்சீனக் கடல் தீர்ப்பாய விருது’ என்ற பாடல் வரிகளுடன் அது கடலுக்குள் வீசப்பட்டு, கப்பலில் உள்ள நீர் பாய்ச்சும் பீரங்கி ஆயுதத்தால் அது தாக்கப்படுகிறது.

காணொளிக் கண்டித்த பிலிப்பீன்ஸ் தற்காப்புச் செயலாளர் கில்பெர்ட்டோ டியோடொரோ அதனை இழிவான பிரசாரம் என்று வகைப்படுத்தினார்.

வட்டாரத் தலைமைத்துவத்தைக் கொண்ட நாடு என்று தன்னைப் பறைசாற்றிக்கொள்ளும் ஒரு நாட்டின் இச்செயல் அவமானத்துக்குரியது என்று அவர் கூறினார்.

இந்தச் சம்பவம், இனவாதத்தையும் மிரட்டல்களையும் திட்டமிட்ட வெறுப்பையும் கையிலெடுத்துள்ள ஓர் அரசாங்கத்தின் வலுவற்ற நடவடிக்கை என்று அவர் குறிப்பிட்டார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

சட்டப்படி அதன் நியாயமற்ற கோரிக்கையைத் தற்காத்து செயலாற்றமுடியாமல் தோல்வியுற்ற அரசாங்கத்தின் நிலையை இது வெளிப்படுத்துகிறது எனவும் அவர் கடிந்துகொண்டார்.

சீனா தென்சீனக் கடலில் உள்ள பல பகுதிகளுக்காக முன்வைத்த உரிமைக் கோரிக்கைகள் கடந்த 2016ல் அனைத்துலக நிரந்தரத் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில் நிராகரிக்கப்பட்டன.

அத்தீர்ப்பின் பத்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஜூலை 10ஆம் தேதி, தென்சீனக் கடலில் சீனா உரிமை கொண்டாட சட்டப்படி எந்த அடிப்படையும் இல்லை என ஜப்பான், பிலிப்பீன்ஸ், அமெரிக்கா உட்பட பதினான்கு நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டன.

குறிப்புச் சொற்கள்
பிலிப்பீன்ஸ்சீனாதென்சீனக் கடல்தீர்ப்புஜப்பான்அமெரிக்காகடல்போலி காணொளிகாணொளிஅறிக்கை