மணிலா: பிலிப்பீன்சில் உள்ள புகழ்பெற்ற மேயன் எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, மணிலாவிற்குத் தெற்கே உள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
எரிமலையைச் சுற்றியுள்ள 6 கிலோ மீட்டர் தொலைவிலான ‘ஆபத்தான பகுதிக்குள்’ பொதுமக்கள் நுழைய வேண்டாம் என்று பிலிப்பீன்ஸ் அரசாங்கம் எச்சரித்துள்ளது.
தென்கிழக்கு ஆசியாவின் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக்கூடிய செயல்நிலை எரிமலைகளில் எரிமலைகளில் ஒன்றான மேயனில், மிதமான வெடிப்பும் குறுகிய கால எரிமலைக் குழம்பு (லாவா)உமிழ்வும் காணப்படுவதாக எரிமலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் காரணமாக, ஐந்து நிலை எச்சரிக்கை அமைப்பில், மூன்றாவது நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவுடன் எரிமலைக் குழம்பு பெருக்கெடுத்து ஓடும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சமூக நலன், மேம்பாட்டுத் துறையின் அறிக்கையின்படி, தற்போது கிட்டத்தட்ட 1,500 குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
எரிமலை அடர்த்தியான சாம்பலைக் கக்கியதால் சனிக்கிழமை (மே 2) அல்பே மாகாணத்தில் பெய்த கடும் சாம்பல் மழையினால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
மிக நேர்த்தியான கூம்பு வடிவத்திற்குப் பெயர்பெற்ற மேயன் எரிமலை, ஒரு முக்கியச் சுற்றுலாத் தலமாகும்.

