சீனாவில் வெளிநாடுகளுக்குச் சொந்தமான மருத்துவமனைகளுக்குப் புதிய விதிமுறைகள்

2 mins read
b2300ced-1d48-4aed-a8f1-8a2966f5f560
வெளிநாடுகளுக்குச் சொந்தமான இந்த மருத்துவமனைகளின் தகவல் நிர்வாகத் தளம், சீனாவின் மேற்பார்வைத் தளத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.  - படம்: சைனா டெய்லி/ஏஷியா நியூஸ் நெட்வொர்க்

பெய்ஜிங்: சீனாவில் வெளிநாடுகளுக்குச் சொந்தமான மருத்துவமனைகள் மருத்துவச் சேவை வழங்க அந்நாட்டில் உள்ள ஒன்பது பகுதிகளில் சீன அரசாங்கம் அண்மையில் அனுமதி வழங்கியது.

சீனாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கும் சீன மக்களுக்கும் பலதரப்பட்ட மருத்துவச் சேவையை வழங்கும் இலக்குடன் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் நவம்பர் 29ஆம் தேதியன்று தெரிவித்தனர்.

பெய்ஜிங், தியன்ஜின், ஷாங்காய், ஜியாங்சு மாநிலத்தில் உள்ள நன்ஜிங், ஃபுஜியன் மாநிலத்தில் உள்ள ஃபூச்சோ, குவாங்டோங் மாநிலத்தில் உள்ள ஷென்சென், குவாங்சோ ஆகியவற்றுடன் ஹைனான் தீவிலும் இந்த மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சோதனைத் திட்டத்துக்கு உட்படும் இந்த இடங்கள் உயர்தர மருத்துவ வளங்களை இறக்குமதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் உள்நாட்டு மருத்துவச் சேவைகளும் வர்த்தகச் சூழலும் மேம்படுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

இந்த மருத்துவமனைகள் முழுக்க முழுக்க வெளிநாடுகளுக்குச் சொந்தமானவை என்று குறிப்பிட்ட அதிகாரிகள், அவற்றை சீனா மேற்பார்வையிட விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தனர்.

இத்தகைய மருத்துவமனைகளைத் திறக்க குறிப்பிட்ட நிபந்தனைகள், தகுதிமுறைகள், செயல்முறைகள் ஆகியவற்றை சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் நிர்ணயித்து நடைமுறைப்படுத்தியுள்ளது.

உதாரணத்துக்கு, வெளிநாடுகளுக்குச் சொந்தமான இந்த மருத்துவமனைகளின் தகவல் நிர்வாகத் தளம், சீனாவின் மேற்பார்வைத் தளத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

மருத்துவ சாதனங்கள் தொடர்பான மின்னணுவியல் மருத்துவப் பதிவுகளையும் தகவல்களையும் கொண்டிருக்கும் கருவிகள் சீனாவில் இருக்க வேண்டும் என்ற விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவத் தகவல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்குச் சொந்தமான இந்த மருத்துவமனைகள் சீன மருத்துவமனைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள அதே நிர்வாகத் தரநிலையைக் கட்டிக்காக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்