பேங்காக்: தாய்லாந்திலும் பிலிப்பீன்சிலும் கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டோகிறது. வெள்ளத்தினால் பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
தாய்லாந்தில் வெள்ளத்தில் சிக்கி மாண்டோரின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்தது என்று அந்நாட்டு அதிகாரிகள் சனிக்கிழமை (செப்டம்பர் 27) தெரிவித்தனர். நிவாரணப் பணிகள் தொடர்கின்றன.
சாவ் பராயா ஆறு ஓடும் மாநிலங்களில் 260,000க்கும் அதிகமானோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்.
வெள்ளத்தால் ஆக மோசமாகப் பாதிப்படைந்த அயுத்தயா மாநிலத்தை தாய்லாந்துப் பிரதமர் அனுடின் சார்ன்விராக்குல் சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
அங்குள்ளவர்களுக்குத் தேவையான பொருள்களை விநியோகிக்கவும் நிலச்சரிவு ஏற்படும் அபாயமுள்ள இடங்களைக் கண்காணிக்கவும் பேரிடர் தடுப்பு ஊழியர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
இதற்கிடையே, புவாலோய் புயல் காரணமாகப் பிலிப்பீன்சில் மாண்டோரின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 26) பிலிப்பீன்சின் மத்தியப் பகுதியில் உள்ள சிறு தீவுகள் கடுமையாகப் பாதிப்படைந்தன.
பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் விழுந்ததுடன், வீடுகளின் கூரைகள் பெயர்ந்தன. புயல் காரணமாக வெள்ள நீர் கரைபுரண்டோடியது.
புயல், வெள்ளம் காரணமாகப் பலர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர்.
தொடர்புடைய செய்திகள்
இதில் பிலிரான் எனும் சிறிய தீவு ஆக மோசமாகப் பாதிப்படைந்தது. அங்கு எட்டு பேர் மாண்டதுடன் இருவரைக் காணவில்லை என்று மாநிலப் பேரிடர் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.
பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதாகவும் சாலைகள் துண்டிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், வானிலை மேம்பட்டு வருவதால் பலர் வீடு திரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டது.
புயல் காரணமாக மத்திய பிலிப்பின்சீல் 14 பேரைக் காணவில்லை. 200,000க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து துயர்துடைப்பு முகாம்களில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
மனிதச் செயல்களால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தினால், உலகம் வெப்பமடைவதால் புயல்கள் அதிக சக்திவாய்ந்தவையாக மாறிவருவதாக அறிவியல் அறிஞர்கள் எச்சரிக்கின்றனர்.