வாஷிங்டன்: சர்ச்சைக்குரிய தென்சீனக் கடற்பகுதியில், சீன-பிலிப்பீன்ஸ் கப்பல்களுக்கு இடையே நடந்த மோதலில் மணிலாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது அமெரிக்கா. அதன் மூலம் தனக்கும் பிலிப்பீன்சுக்கும் இடையே உள்ள தற்காப்பு உடன்பாட்டை வாஷிங்டன் மறுஉறுதிப்படுத்தியிருக்கிறது.
முன்னதாகச் சீன வெளியுறவு அமைச்சு, மணிலாவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. தனது வட்டார அதிகாரம், கடல்துறை உரிமை, நலன் ஆகியவற்றைப் பாதுகாக்கப் பெய்ஜிங் எடுக்கும் முயற்சிகளுக்குச் சவால் விடுக்கவேண்டாம் என்று சீனா கூறியது. ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) நடந்த சம்பவத்தில் பிலிப்பீன்ஸ் கப்பல் மீது சீனக் கப்பல் நீரைப் பீய்ச்சியடித்ததாக மணிலா சொன்னது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் டோமி பிகோட் (Tommy Pigott) சீனாவின் நடவடிக்கையைக் கண்டித்தார். வாஷிங்டன் அதன் நட்பு நாடான பிலிப்பீன்சுக்கு ஆதரவாய்த் துணைநிற்பதாக அவர் சொன்னார். சீனாவின் ஆபத்தான நடவடிக்கைகள் வட்டார நிலைத்தன்மையைக் கீழறுப்பதாகத் திரு பிகோட் சாடினார்.
ஸ்ப்ராட்லி தீவுக்குள் இருக்கும் சேண்டி கே எனும் பவளப்பாறைக்கு அருகே மோதல் சம்பவம் நடந்தது. அதன் தொடர்பில் சீனாவும் பிலிப்பீன்சும் ஒன்றை மற்றொன்று குறைகூறுகின்றன. கப்பலுக்குச் சிறிது சேதம் ஏற்பட்டதாக மணிலா சொல்கிறது. பெய்ஜிங் அதனை மறுக்கிறது.
தென்சீனக் கடற்பகுதியில் இரு தரப்புக்கும் இடையில் சர்ச்சை ஏற்படுவது புதிதல்ல. அந்தக் கடற்பகுதி வழியாகக் கப்பல்களில் ஆண்டுதோறும் US$3 டிரில்லியன் மதிப்புள்ள சரக்குகள் கொண்டுசெல்லப்படுவதாகக் கூறப்படுகிறது.

