சானா: ஈரான் ஆதரவுடன் ஏமன் அரசாங்கத்துக்கு எதிராகப் போராடி வரும் ஹூதி அமைப்பினர், ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் முக்கிய கப்பல் பாதையை கைப்பற்றியுள்ளனர்.
ஒரு வாரத்துக்கும் மேலாக ஏமன் அரசாங்கப் படைகளுக்கு எதிராக அவர்கள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு அந்நாட்டின் அருகில் உள்ள பாப் அல்-மந்தாப் நீரிணையை தற்போது முற்றிலும் தங்கள் வசம் வைத்துள்ளனர்.
எனவே செங்கடலுக்கும் சுவேஸ் கால்வாய்க்குமான வழிப்பாதைகள் இனி அவர்களது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
அதன்படி, செங்கடலின் கடற்கரையோரம் முழுவதும் ஹூதிப் படைகளின் கைவசம் உள்ளது. வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) அவர்கள் நடத்திய அதிரடித் தாக்குதலில் அக்கடல் பகுதியில் இருந்த மூன்று முக்கியத் தீவுகளை அவர்கள் போராடி வென்றுள்ளனர்.
மத்திய கிழக்கில் நடக்கும் இந்த நிலவரத்தினால் அனைத்துலக வர்த்தகம் ஆழமாகப் பாதிக்கப்படும் நிலமை உருவெடுத்துள்ளது.
முக்கிய எண்ணெய் விநியோகக் குழாய்களை சவூதி அரேபியா அடைத்துள்ளதாலும், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் ஆக்கிரமித்துள்ளதும் உலக வர்த்தகத்துக்குப் பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிட்டது.
ஹூதிப் போராளிகளுக்கும் ஏமன் ராணுவத்துக்கும் பல நாள்களாக நடந்துவரும் போரில் நூற்றுக்கணக்கானோர் இதுவரை கொல்லப்பட்டனர் என்று அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

