பெய்ஜிங்: அமெரிக்காவின் மூன்று ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளிகளில் ஒன்று சீனா. அந்நாட்டுப் பொருள்களுக்குப் புதிய, பேரளவிலான வரி விதிக்கப்போவதாக அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளியலைக் கொண்ட சீனாவின் ஏற்றுமதி, இறக்குமதி ஆகிய இரண்டிலும் டிரம்பின் அறிவிப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது சீனாவின் ஏற்றுமதி வளர்ச்சி நவம்பர் மாதம் மெதுவடைந்தது. அதேசமயம் இறக்குமது எதிர்பாராத விதமாக சுருங்கியது.
இதனால், அந்நாடு வர்த்தக ரீதியில் பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
சீனாவின் சுங்கத் தரவுகளின்படி, நவம்பரில் ஏற்றுமதி வெறும் 6.7 விழுக்காடு மட்டுமே வளர்ச்சி கண்டது. ராய்ட்டர்சின் பொருளியல் வல்லுநர்களின் கணிப்புப்படி ஏற்றுமதி 8.5 விழுக்காடு வளர்ச்சியடைந்திருக்க வேண்டும்.
கடந்த அக்டோபர் மாதம் சீனாவின் ஏற்றுமதி 12.7 விழுக்காடு வளர்ச்சி கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இவை எல்லாவற்றையும்விட மிகவும் கவலையளிக்கும் தகவல் என்னவென்றால், சீனாவின் இறக்குமதி 3.9 விழுக்காடு சுருங்கியது. கடந்த ஒன்பது மாதங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இதுவே ஆக குறைவு எனத் தெரிவிக்கப்பட்டது.

