மியன்மாரை மோசமான நிலநடுக்கம் உலுக்கியதைத் தொடர்ந்து அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் தேடல், மீட்பு நடவடிக்கைகளில் சிங்கப்பூரின் எந்திரக் கரப்பான்கள் (cyborg cockroaches) உதவி வருகின்றன.
எந்திரக் கரப்பான்கள், நவீன தொழில்நுட்ப அம்சங்கள் பொருத்தப்படும் நிஜ கரப்பான்களாகும்.
சிங்கப்பூரிலிருந்து மொத்தம் 10 எந்திரக் கரப்பான்கள் கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி மியன்மாருக்கு அனுப்பப்பட்டன. தேடல், மீட்புப் பணிகளில் கைகொடுக்க மியன்மாருக்கு அனுப்பப்பட்ட சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் ‘ஆப்பரேஷன் லயன்ஹார்ட்’ (Operation Lionheart) படையினருடன் இந்த எந்திரக் கரப்பான்கள் சேர்ந்துகொண்டன.
உலகில் மனிதாபிமான நடவடிக்கையில் எந்திரக் கரப்பான்கள் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.
எந்திரக் கரப்பான்களை உள்துறை அமைச்சு சீருடைப் பிரிவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு (HTX), நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கிலாஸ் எஞ்சினியரிங் அண்ட் சல்யூஷன்ஸ் (Klass Engineering Solutions) நிறுவனம் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன. இவை முதலில் மார்ச் 30ஆம் தேதி மியன்மாரில் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. பின்னர் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 3) மியன்மார் தலைநகர் நேப்பிடோவில் இருமுறை பணியில் ஈடுபடுத்தபப்ட்டன.
எந்திரக் கரப்பான்கள் இதுவரை நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்தோர் யாரையும் கண்டுபிடிக்கவில்லை. எனினும், நிலநடுக்கத்தால் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இடங்கள் சிலவற்றில் மீட்புப் பணியாளர்களுக்கு உதவியாக இருந்திருக்கின்றன.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, மார்ச் 29ஆம் தேதியன்று 80 வீரர்களைக் கொண்ட குழுவையும் தேடல், மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் நான்கு நாய்களையும் மியன்மாருக்கு அனுப்பிவைத்தது. உள்துறை அமைச்சு சீருடைப் பிரிவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்புக் குழு மீட்புப் பணிகளில் ஈடுபட மறுநாள் சேர்ந்துகொண்டது. அது, தன்னுடன் எந்திரக் கரப்பான்களைக் கொண்டு சென்றது.
உள்துறை அமைச்சு சீருடைப் பிரிவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பின் குழுவில் அதன் பொறியாளர்கள் இருவரும் கிலாஸ் எஞ்சினியரிங் அண்ட் சொலியூஷன்சின் பொறியாளர்கள் இருவரும் இடம்பெற்றுள்ளனர்.