சீனா: கனமழைக்கு ஒருவர் உயிரிழப்பு; இருவர் மாயம்

சீனா: கனமழைக்கு ஒருவர் உயிரிழப்பு; இருவர் மாயம்

1 mins read
6b124b30-e3ed-404c-9b09-98e84ef1a99a
ஹூனான் நகரில் மழையால் திரண்ட சேற்றையும் குப்பையையும் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள உள்ளூர்வாசிகள். - படம்: இபிஏ

பெய்ஜிங்: சீனாவில் பல வாரங்களாக வெயில் கொளுத்தி வரும் நிலையில், இப்போது அந்நாட்டின் பல பகுதிகளில் மழை கொட்டித் தீர்க்கிறது.

இதனால் பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் ஒருவர் மாண்டுபோனார்; இருவரை வெள்ளம் இழுத்துச் சென்றது.

கனமழை, கடும் வெயில், ஆலங்கட்டி மழை எனப் பல இடர்களும் சேர்ந்து உள்கட்டமைப்பிற்கும் பயிர்களுக்கும் கால்நடைகளுக்கும் சேதம் விளைவித்துள்ளன.

தென்சீனாவின் பல பகுதிகளிலும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மீட்புப் பணியாளர்கள், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து மக்களையும் கால்நடைகளையும் பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர்.

யூனான் மாநிலத்தில் பெய்த இடைவிடாத மழையால், தெருக்களில் ஓடிய வெள்ளநீரில் கார்கள் அடித்துச் செல்லப்பட்டன. தெருக்கள் ஆறுகள்போல் காட்சியளித்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டன.

சீச்சுவான் மாநிலத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் மாண்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், இன்னும் பத்து நாள்களுக்கு வடசீனாவில் வெப்பமான வானிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.

“கடும் வெயிலைப் பார்த்து பார்த்து நொந்துபோயுள்ளேன்,” என்று சமூக ஊடகவாசி ஒருவர் பதிவிட்டுள்ளார். “கண்ணீர் ஆவியாகிவிடுகிறது என்பதால் என்னால் அழக்கூட முடியவில்லை,” என்று இன்னொருவர் குறிப்பிட்டுள்ளார்.

வடகிழக்கிலுள்ள ஹெய்லோங்ஜியாங் மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை பெய்த ஆலங்கட்டி மழையால் சன்னல் கண்ணாடிகள் உடைந்துபோனதைச் சமூக ஊடகங்களில் வெளியான படங்கள் காட்டின.

குறிப்புச் சொற்கள்