பருவநிலை மாற்றத்தால் 2016 முதல் 2021 வரை 43 மி. சிறார்கள் இடம்பெயர்ந்தனர்

2 mins read
be0fffc6-6677-4fe1-93a4-8073a4ed019b
பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட வெள்ளம், புயல் காரணமாக 95 விழுக்காட்டு சிறார்கள் இடம்பெயர நேரிட்டது. - படம்: ஏஎஃப்பி

பருவநிலை மாற்றம் காரணமாக ஐந்து ஆண்டு காலகட்டத்தில் ஏறக்குறைய 43.1 மில்லியன் சிறார்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ, புயல் போன்ற பேரிடர்களால் 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை 44 நாடுகளில் 43.1 மில்லியன் சிறார்கள் இடம்பெயர நேரிட்டதாக ஐக்கிய நாட்டு சிறார் நிதியம் (யுனிசெஃப்) எச்சரித்துள்ளது.

அந்த அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூடுதல் கவனம் செலுத்தும்படி அறைகூவல் விடுத்தது.

பாதிக்கப்பட்டுள்ள சில சிறார்களின் வேதனையான கதைகளை அந்த அமைப்பு விவரமாக எடுத்துரைத்தது.

இது, மறைந்திருக்கும் மிகப் பெரிய சூழ்நிலை அல்லது சிக்கலின் சிறிய பகுதி மட்டுமே என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் வர்ணித்த இணை எழுத்தாளர் லாரா ஹீலி, இன்னும் அதிகமான சிறார்கள் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றார்.

“எங்களது உடைமைகளை நெடுஞ்சாலைக்கு நகர்த்தினோம். அங்கு வாரக்கணக்கில் நாங்கள் வசித்தோம்,” என்று சூடானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் காலித் அப்துல் அஸிம் நினைவுகூர்ந்தார்.

பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட வெள்ளம், புயல் காரணமாக 95 விழுக்காட்டு சிறார்கள் இடம்பெயர நேரிட்டது.

“இது, நாள் ஒன்றுக்கு சுமார் 20,000 சிறார்கள் இடம்பெயர்வதற்குச் சமம்,” என்று குறிப்பிட்ட திருவாட்டி ஹீலி, பாதிக்கப்பட்ட சிறார்கள் அதிர்ச்சியால் அவதியுறுவதன் அபாயம் பற்றியும் கூறினார்.

பெற்றோரிடமிருந்து பிரிவது, சிறார்களைக் கடத்துவோரிடம் சிக்கிக்கொள்வது அத்தகைய இடர்களில் அடங்கும்.

வறட்சி காரணமாக இடம்பெயரும் சிறார்களின் எண்ணிக்கை மிகவும் குறைத்து மதிப்பிடப்படுவதாக திருவாட்டி ஹீலி குறிப்பிட்டார்.

வெள்ளம், புயல் போன்று திடீரென ஏற்படக்கூடிய பேரிடராக வறட்சி கிடையாது என்பதால், அதனால் பாதிக்கப்படும் சிறார்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவது சிரமம் என்றார் அவர்.

குறிப்பிட்ட சில வானிலை நிகழ்வுகளுக்கு அந்த அறிக்கை சில முன்னுரைப்புகளையும் வழங்கியுள்ளது.

ஆறு கரைபுரண்டு ஓடுவதால் ஏற்படக்கூடிய வெள்ளத்தால் அடுத்த 30 ஆண்டுகளில் 96 மில்லியன் சிறார்கள் இடம்பெயர நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

புயல் காற்றால் 10.3 சிறார்களும் புயலால் 7.2 சிறார்களும் இடம்பெயர நேரிடும் என்றும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்