காஸா மருத்துவமனையில் வெடிப்பு; நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு

2 mins read
4e974b60-09b4-424d-b0ab-8530701f7c8b
காஸாவில் உள்ள அல் அலி மருத்துவ மனையில் நூற்றுக்கணக் கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, காயமடைந்த வர்களுக்கு ஷிஃபா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 4

காஸா சிட்டியில் உள்ள மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடிப்பில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்துக்கு இஸ்ரேலிய, பாலஸ்தீன அதிகாரிகள் ஒருவர்மீது ஒருவர் பழி சுமத்தி வருகின்றனர். மேற்குக் கரையிலும் மத்திய கிழக்கிலும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.

அல் அலி மருத்துவமனை வெடிப்புக்கு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலே காரணம் என்று காஸா பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

‘இஸ்லாமிய ஜீஹாத்’ எனும் வேறோர் அமைப்பு பாய்ச்சிய எறிபடை மருத்துவமனை மீது தவறுதலாக விழுந்ததே வெடிப்புக்குக் காரணம் என்று இஸ்ரேலிய ராணுவம் புதன்கிழமை சொன்னது.

வான்வழித் தாக்குதலால் மருத்துவமனை குறிவைக்கப்பட்டதற்கான ஆதாரம் எதையும் தான் கண்டுபிடிக்கவில்லை என்று இஸ்ரேலிய ராணுவம் குறிப்பிட்டது.

கடந்த 11 நாள்களில் காஸாவில் இருந்து ஏவப்பட்ட ஏறத்தாழ 450 எறிபடைகள் அப்பகுதியிலேயே விழுந்ததை இஸ்ரேலியத் தலைமை ராணுவப் பேச்சாளர் ரியர்-அட்மிரல் டானியல் ஹகாரி சுட்டினார்.

மருத்துவமனை வெடிப்பில், இடிபாடுகளில் சிக்கிய சடலங்களை மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டதாக காஸா சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரஃப் அல் குத்ரா கூறினார்.

வெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டதாக காஸா குடிமைத் தற்காப்புப் படைத் தலைவர் கூறினார். ஆனால், சுகாதார அமைச்சு தரப்பில் 500 பேர் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டது.

வெடிப்புக்கு யார் காரணம், எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் தன்னிச்சையாக சரிபார்க்க முடியவில்லை.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு முதல் நாள் வெடிப்பு நிகழ்ந்தது. இந்நிலையில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவை மட்டும் அதிபர் பைடன் புதன்கிழமை சந்தித்தார்.

முன்னதாக, வெடிப்பு குறித்து அதிபர் பைடன் வெளியிட்ட அறிக்கையில், “அல் அலி அல் அரபி மருத்துவமனையில் ஏற்பட்ட வெடிப்பில் பெருத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பது, என்னை கடும் கோபத்திலும் ஆழ்ந்த சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

“பூசலின்போது குடிமக்கள் உயிர் பாதுகாக்கப்படுவதற்கு அமெரிக்கா துணைநிற்கிறது. இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு துக்கம் அனுசரிக்கிறோம்,” என்று குறிப்பிட்டார்.

என்ன நடந்தது என்பதை அறிந்து தகவல் பெறுமாறு தமது தேசியப் பாதுகாப்புக் குழுவுக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக அதிபர் பைடன் கூறினார்.

ஜோர்தான் தலைநகர் அம்மானில் அதிபர் பைடன், எகிப்திய, பாலஸ்தீனத் தலைவர்களும் பங்குபெறவிருந்த மாநாட்டை ஜோர்தானிய வெளியுறவு அமைச்சர் அய்மான் சஃபாடி ரத்து செய்தார்.

மருத்துவமனை வெடிப்புக்கு அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

துருக்கி, ஜோர்தானில் உள்ள இஸ்ரேலியத் தூதரகங்களிலும் லெபனானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு அருகிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர்.

ஏமனின் தென்மேற்கு நகரான டாசிலும் மொரோக்கோ, ஈராக் தலைநகர்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

குறிப்புச் சொற்கள்