தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸா விவகாரத்தில் வலுவான ஒருங்கிணைப்புக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு பிரிட்டன் வேண்டுகோள்

2 mins read
c5d1b311-5bd1-49ca-9ea6-80e9609f0918
பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரன். - படம்: இபிஏ

லண்டன்: பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரன், காஸாவில் நிலவும் மனிதநேயச் சூழலைக் கையாள்வது தொடர்பில் நட்பு நாடுகளுக்கிடையே கூடுதல் ஒருங்கிணைப்புக்கு அழைப்பு விடுக்கத் திட்டமிட்டுள்ளார்.

தமது பாரிஸ், ரோம் பயணங்களின்போது திரு கேமரன் அவ்வாறு கேட்டுக்கொள்வார் என்று அவரது அலுவலகம் தெரிவித்தது.

அனைத்துலகப் பாதுகாப்புக்கு, வாழ்நாளில் காணாத அளவு ஆகப் பெரிய சவால்கள் விடுக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய நட்பு நாடுகள் வலுவாகவும் மீள்திறனோடும் அவற்றை எதிர்கொள்வது அவசியம் என்றார் அமைச்சர் கேமரன்.

பிரிட்டனின் முன்னாள் பிரதமரான அவர், ஒரு மாதத்திற்கு முன்பு வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

காஸாவில் நிலவும் நம்பிக்கையற்ற மனிதநேயச் சூழல் முதல் உக்ரேனில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் கொடுமை வரை, நமது நட்பை வலுப்படுத்துவதும் நமது குரல் அங்கீகரிப்படுவதை உறுதிசெய்வதும் முன்னெப்போதையும்விட மிக முக்கியம் என்றார் அவர்.

பாரிஸில் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் கேத்தரின் கொலோன்னா, அந்நாட்டு அதிபர் இம்மானுவெல் மேக்ரோன் ஆகியோரைச் சந்திக்கும்போது, உக்ரேனுக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்கவேண்டுமென்று திரு கேமரன் வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளார். உக்ரேன், மத்திய கிழக்கு நிலவரங்கள் குறித்து அவர்கள் கலந்துரையாடுவர் என்று கூறப்பட்டது.

ரோமில் இத்தாலியப் பிரதமர் ஜியார்ஜியா மெலோனியை திரு கேமரன் சந்திப்பார். சட்டவிரோதக் குடியேறிகள் பிரச்சினையைச் சமாளிப்பதில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பில் அவர்கள் கலந்துபேசுவர்.

காஸாவில் நிலையான சண்டை நிறுத்தத்திற்குக் குரல் கொடுக்கவேண்டும் என்று திரு கேமரன் மீண்டும் வலியுறுத்துவார். காஸாவிற்குள் மனிதநேய உதவிகள் அனுப்பப்படுவதை உறுதிசெய்வதில் ஐரோப்பிய நாடுகளின் மேம்பட்ட ஒத்துழைப்பிற்கும் அவர் வேண்டுகோள் விடுப்பார் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்