மணிலா: பிலிப்பீன்ஸ் ராணுவ உயரதிகாரியுடனான (அட்மிரல்) தொலைபேசி உரையாடல் கசிந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் சீனாவின் தூதர்கள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிலிப்பீன்சின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வெள்ளிக்கிழமையன்று (மே 10) உத்தரவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்தது.
முரண்பாடு, பிளவு, ஒற்றுமையின்மை ஆகியவற்றை விதைக்கும் நோக்கத்துடன் தவறான தகவல்களைப் பரப்பும் செயலில் மணிலாவில் இருக்கும் சீனத் தூதரகம் செயல்பட்டு வருவதாக திரு எடுவார்டோ அனோ வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.
சீனத் தூதரக அதிகாரிகளை வெளியேற்ற வேண்டும் என்று பிலிப்பீன்ஸ் அரசாங்கம் விடுத்த கோரிக்கை குறித்து மணிலாவில் உள்ள சீனத் தூதரகம் உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்று ராய்ட்டர்ஸ் கூறியது.
மேலும், பிலிப்பீன்ஸ் அதிபர் அலுவலகமும் வெளியுறவு அமைச்சும் இது குறித்து எந்தக் கருத்தும் உடனடியாகத் தெரிவிக்கவில்லை என்றும் அது தெரிவித்தது.
இவ்விரு நாடுகளுக்கும் இடையே தென் சீனக் கடலின் சர்ச்சைக்குரிய பகுதிகள் குறித்து பிரச்சினைகள் இருந்து வருகிறது.
அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகளின் ஆதரவுடன் சீனாவின் கடலோரக் காவல்படையினர் சுற்றுக்காவல் செல்லும் தென் சீனக் கடலின் சர்ச்சைக்குரிய பகுதியில், பிலிப்பீன்சின் கடலோரக் காவல்படையினர் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டனர். இதனால், கடந்த ஆண்டு இவ்விவகாரம் தீவிரமடைந்தது.
பிலிப்பீன்சின் இச்செயலை அத்துமீறல், துரோகம் என்று சீனா குற்றம் சாட்டியது. அதே நேரத்தில், பிலிப்பீன்ஸ் சீனாவை ஆக்கிரமிப்புக் கொள்கை, ஆபத்தான சூழ்ச்சிக் கொள்கை கொண்ட நாடு என விமர்சித்தது.

