பெய்ஜிங்: தென் சீனாவில் பெய்யும் கடும் மழையால் யாங்சி ஆற்றில் நீரின் அளவு அதிகரித்து வருவதால் அந்நாட்டின் கிழக்குப் பகுதிகளில் உள்ள வட்டாரங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
வெள்ளத்தை எதிர்கொள்ள சம்பந்தப்பட்ட பகுதிவாசிகள் தயார்ப்படுத்திக்கொண்டு வருகின்றனர். ஜியாங்சு மாநிலத்தில் உள்ள சீனாவின் ஆக நீளமான ஆறான யாங்சியின் பகுதியில் புதன்கிழமையன்று (ஜூலை 3) நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருந்தது.
கிழக்கு சீனாவில் கடும் மழை காரணமாக கிட்டத்தட்ட 250,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர் என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த சில மாதங்களாக சீனா மோசமான பருவநிலையை எதிர்நோக்கி வருகிறது. தொடர் கனமழை, அனல் காற்று ஆகியவற்றால் அந்நாடு பாதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாயு வகைகளை ஆக அதிக அளவில் வெளியேற்றும் நாடு சீனா. அது, பருவநிலை மாற்றத்துக்கு வழிவிடுவதாகவும் தீவிரமான, மேலும் கீழுமான வானிலை நிகழ்வுகளை அடிக்கடி ஏற்படுத்துவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கடும் மழையால் அன்ஹுய் மாநிலத்தில் 991,000 குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டதாக சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. செவ்வாய்க்கிழமைக்குள் (ஜூலை 2) 242,000 பேரை வீடுகளிலிருந்து வெளியேற்றவேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் சின்ஹுவா குறிப்பிட்டது.

