தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாய்லாந்தில் வெள்ளம்: 9 பேர் உயிரிழப்பு, ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

2 mins read
35834f0c-b422-4986-9879-53a28d458cc5
தாய்லாந்தின் தென்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் 13,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

பேங்காக்: தாய்லாந்தின் தென்பகுதியில் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் ஒன்பது பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட குடியிருப்பாளர்கள் படகுகள் மூலம் மீட்கப்படும் நிலையில், 13,000க்கும் மேற்பட்டோர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் நவம்பர் 30ஆம் தேதி கூறினர்.

தாய்லாந்து ஊடகங்கள் வெளியிட்ட காணொளிகளில் மக்கள் நெஞ்சு வரை தேங்கியுள்ள நீரில் நடந்து செல்வது பதிவாகியுள்ளது. வீதிகளில் கார்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றன.

“நாட்டின் தென்பகுதியில் உள்ள மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஒன்பது பேர் மாண்டுவிட்ட நிலையில் 553,921 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவசரகால உதவிப் பிரிவினர் உதவிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்,” என்று தாய்லாந்தின் பேரிடர் நிர்வாக அமைப்பு அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டோருக்காகப் பள்ளிகள், கோயில்களில் தற்காலிகத் தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அது குறிப்பிட்டது.

வெள்ள நிலைமை இதேபோல் நீடித்தால், உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வெள்ளம் புகுந்து சேதம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் பட்டானி மாநிலத்தில் இரண்டு மருத்துவமனைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

தென்பகுதியில் அடுத்த வாரம் முழுவதும் கனமழை தொடரும் என்று தாய்லாந்து வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.

மீட்புக் குழுவினரைப் பணியில் ஈடுபடுத்தியுள்ள தாய்லாந்து அரசாங்கம், வெள்ள நிவாரணத்துக்காக 50 மில்லியன் பாட் (S$1.9 மில்லியன்) ஒதுக்கியிருக்கிறது.

கூடிய விரைவில் வழக்கநிலையை மீட்டெடுப்பது இலக்கு என்று தாய்லாந்துப் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவாத், நவம்பர் 29ஆம் தேதி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், அருகிலுள்ள மலேசியாவின் வடபகுதியிலும் கனமழையால் கிட்டத்தட்ட 80,000 பேர் தற்காலிகத் தங்குமிடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். அங்கு வெள்ளத்தால் நால்வர் மாண்டுவிட்டதாக அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்