புவியைக் காக்க மறந்த ஆசிய நாடுகள், வாரிச்சுருட்டிய பெருமழை

4 mins read
6a1e4be3-f2a3-4c5b-b269-e69aebc17a12
தாய்லாந்து, இந்தோனீசியா, இலங்கை, மலேசியா எனப் பல நாடுகள் அண்மையில் இயற்கையின் சீற்றத்தால் கடும் பாதிப்புக்குள்ளாகின. தென்கிழக்காசிய, தெற்காசிய நாடுகளில் ஏற்பட்ட இந்தப் பேரிடரில் சிக்கி ஏறத்தாழ 1,600க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர நேரிட்டது. - படம்: இந்தோனீசிய ஊடகம்
multi-img1 of 2

நவம்பர் மாதத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்களால் இலங்கை முதல் இந்தோனீசியா வரை, தெற்காசியா முதல் தென்கிழக்காசியா வரை, பல நகரங்களை வாரிச் சுருட்டிச் சென்றது மழைவெள்ளம்.

ஒருபுறம் இன்பச் சுற்றுலாவில் திளைக்கத் தாய்லாந்து சென்ற பயணிகள், வரலாறு காணாத அளவில் கொட்டித் தீர்த்த கனமழையால் துன்பக்கடலில் சிக்கித் தவித்தனர். வெளிநாட்டினரையும் உள்ளூர்வாசிகளையும் உயிருடன் மீட்பதில் ஏற்பட்ட தொய்வைப்  பார்த்துச் செய்வதறியாது திகைப்பில் மூழ்கினர் அந்நாடுகளின் அதிகாரிகள்.

ஆசிய நாடுகள் பல காலமாக இயற்கையைப் பாதுகாக்காமல் மெத்தனமாக இருந்ததால் இவ்வாறு அசாதாரண பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வறிக்கைகள் சுட்டின. வரலாறு காணாத பெருமழை விலங்கினங்களையும் தத்தளிக்க வைத்தது.
ஆசிய நாடுகள் பல காலமாக இயற்கையைப் பாதுகாக்காமல் மெத்தனமாக இருந்ததால் இவ்வாறு அசாதாரண பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வறிக்கைகள் சுட்டின. வரலாறு காணாத பெருமழை விலங்கினங்களையும் தத்தளிக்க வைத்தது. - படம்: ஏஎஃப்பி

மறுபுறம் சூறாவளி மற்றும் தொடர்மழையால் நாடு, சுனாமியைக் காட்டிலும் கடுமையான பேரழிவைச் சந்தித்ததாக ஆழ்ந்த கவலை தெரிவித்திருந்தார் இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க.

இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரசாங்கத்தின் மீது ஏற்பட்ட அதிருப்தியால் வீதியில் இறங்கிப் போராடிய இந்தோனீசிய மக்கள் இம்முறை புயல், பெருமழை காரணமாகத் தங்கள் வீடுகளை இழந்து நிலை தடுமாறிப் போயினர்.

அண்டை நாடான மலேசியாவையும் விட்டுவைக்கவில்லை இந்தப் பாதிப்பு. மலேசியாவைத் தத்தளிக்க வைத்தது மழை. இப்படியாகத் தெற்காசியாவிலும் தென்கிழக்காசியாவிலும் கணிசமான பகுதிகள் நவம்பர் மாத இறுதியில் இரு பெரும் புயல்களால் அலைக்கழிக்கப்பட்டன.

‘சென்யார்’ சூறாவளி நவம்பர் 26, 27 ஆம் தேதிகளில் இந்தோனீசியா மற்றும் மலேசியாவில் கரையைக் கடந்தது. ஏறத்தாழ அதேவேளையில்தான் இலங்கையில் கோரதாண்டவமாடியது ‘டிட்வா‘ புயல். 

உலக வரைபடத்திலிருந்து இலங்கையின் முக்கியப் பகுதிகள் காணாமற்போய்விடுமோ என்று அஞ்சும் அளவுக்கு அந்நாட்டின் மக்கள்தொகையில் பத்து விழுக்காட்டினர் அந்தச் சூறாவளியால் ஏற்பட்ட கனமழையாலும் நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டனர்.  

இயற்கைச் சீற்றத்தால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 1,600க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள்  இடம்பெயர நேரிட்டது. எண்ணிலடங்காதோர் கதி என்னவென்றே தெரியவில்லை. 

ஆசியக் கண்டத்தைப் புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளியின் தாக்கம்  சிங்கப்பூரின் காய்கறிச் சந்தையிலும் எதிரொலித்தது. பாதிக்கப்பட்ட நாடுகளில் விளைநிலங்கள் நீரில் மூழ்கின. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அடுத்த வேளை உணவுக்கும் மீட்புக் குழுவினரைச் சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அண்மைய மழையும் வெள்ளமும், பேரழிவும் காலநிலையின் மோசமான தாக்கத்தை உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
அண்மைய மழையும் வெள்ளமும், பேரழிவும் காலநிலையின் மோசமான தாக்கத்தை உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. - படம்: ஏஎஃப்பி

அடுத்தடுத்து நிகழ்ந்த இந்தப் பேரழிவுகள் மிகப் பெரிய எச்சரிக்கை மணியை அடித்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

பல காலமாக இயற்கையைப் பாதுகாக்காமல் மெத்தனமாக இருந்ததால் இவ்வாறு அசாதாரண பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.

உலக வெப்பநிலை உயர்வு, மனித நடவடிக்கையால் காடுகள் அழிந்துபோனது, வங்கக்கடல், பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் உள்ளிட்டவற்றின் மேற்பரப்பில் நிலவும் வெப்பநிலை காரணமாகச் சிறு மழைப் பொழிவும்கூட, கடுமையான புயல் உள்ளிட்ட தீவிரமான இடராய் மாறியதை வல்லுநர்கள் சுட்டினர்.

மழைக்காலத்தில் புயல் வீசுவது இயல்பு என்றாலும் தற்போது நிகழும் மாற்றங்கள் வழக்கத்திற்கு மாறானவை என்றும் இதனால் கூடுதலாக மழை பெய்கிறது; மழைக்காலம் நீடிக்கிறது; அதிகமான குளிர்ச்சி அல்லது அதிகமான வெப்பம் எனச் சமமற்ற சூழல் நிலவுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் கூர்ந்து கவனித்தால் அண்மைய மழையும் வெள்ளமும், பேரழிவும் காலநிலையின் மோசமான தாக்கத்தை உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளதை மறுக்க முடியாது.

இந்த ஆபத்தில் சிக்கியோரை மீட்க அனுப்பப்பட்ட உணவுப் பொருள்கள், மருத்துவக் கருவிகள், குடிநீர்ச் சுத்திகரிப்பு மருந்துகள், உடைகள் மட்டுமே அவர்களுக்கான நிவாரணத்தை அளிக்காது.

பருவநிலை மாற்றத்திற்கு எதிரான உறுதியான கடப்பாட்டை ஆசிய நாடுகள் எடுக்க வேண்டிய முக்கிய தருணம் இது என்பதை உரக்கச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளது சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீர்.

பொருளியல் வளர்ச்சிக்கே முன்னுரிமை கொடுத்து வரும் நாடுகள், மனித நடவடிக்கைகளால் உருவாகும் கூடுதல் வெப்பம், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாயு வெளியேற்றம் உள்ளிட்டவற்றால் பருவநிலை மாற்றம் எனும் பேரழிவில் சிக்கிக்கொள்ளாமல் செயல்படுவது காலத்தின் கட்டாயம்.

தற்போது கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நாடுகள்,  பேரிடர்களைத் தாங்கக்கூடிய உள்கட்டமைப்பை எழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும். 

பருவநிலை மாற்றம் என்பது உலகளாவிய அச்சுறுத்தல் எனினும் அதன் தாக்கம் உள்ளூரையும் விட்டுவைக்காது என்பதை யாவரும் உணர வேண்டும்.

வளர்ந்த நாடுகள்  இத்தகைய பருவநிலை இடர்களில் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு உதவ, பொறுப்புடன் நடந்துகொள்வதும் மிக அவசியம். 

எனவே பூமியைக் காக்க, அனைத்துலகச் சமூகம் அதற்கு உகந்த சுற்றுச்சூழலை நிலைக்கச் செய்வதற்கு ஏதுவான கொள்கைகளை வகுப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் அதனை முழுவீச்சில் செயல்படுத்தவும் இதுவே ஏற்றவேளை.

கோர தாண்டவம் ஆடிய இயற்கை, வீடுகளையும், மேம்பாலங்களையும் இருந்த இடம் தெரியாமல் உருக்குலைத்துவிட்டதே என்று விரக்தியின் பாதையில் நிற்க வேண்டிய காலம் இதுவன்று.

இயற்கையைக் காத்து, மனிதர்கள் தங்கள் இனத்தையும் காத்துக்கொள்வதற்கான நம்பிக்கையின் வாசலை இயற்கை இன்னும் விட்டுவைத்தே சென்றுள்ளது என்பதால், ஒவ்வொரு நாடும் பருவநிலை மாற்றம் குறித்த விவாதத்தில் மூழ்கித் தீர்மானம் போடுவதுடன் மட்டும் நின்றுவிடாமல், அதனைத் துடிப்புடன் செயல்படுத்துவதற்குக் களத்தில் இறங்க வேண்டிய நேரம் இது.

குறிப்புச் சொற்கள்