ஹாலந்திலிருந்து சிங்கப்பூர் வரை சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ள இரு ஆடவர்கள் இதுவரை 4,000 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்துவிட்டனர்.
இன்ஸ்டகிராம் பதிவில், இதுவரை இருவரும் கடந்த வந்த பாதைகளைக் காணொளியாகப் பகிர்ந்துள்ளனர். ஐரோப்பாவைக் கடந்து அவர்கள் ஆசிய கண்டத்திற்கு வந்து சேர்ந்ததை அவர்கள் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்கள் பெல்ஜியம், ஜெர்மனி, சுலோவேனியா, குரோஷியா, போஸ்னியா, செர்பியா, பல்கேரியா, துருக்கி ஆகிய நாடுகளின் வழியே, ஜார்ஜியாவை அடைந்துள்ளனர்.
“நாங்கள் நெதர்லாந்திலிருந்து (ஹாலந்து) சிங்கப்பூருக்கு வருகிறோம். இதுவே எங்களின் வழித்தடம்,” என்று அவர்கள் பதிவின் தொடக்கத்தில் கூறினர்.
ஐரோப்பாவைக் கடந்த பயணம்
அந்த இருவரும் தாய்நாடான ஹாலந்தில் பயணத்தைத் தொடங்கி, மிக விரைவில் பெல்ஜியத்தை அடைந்தனர். அங்கிருந்து ஜெர்மனிக்குள் நுழைந்து அங்குள்ள பாதைகளைக் கடக்க சற்று நேரம் எடுத்துக்கொண்டனர்.
ஏனெனில் அப்பகுதியில் அவர்கள் ‘ரொமென்டிக் ரோட்’ எனப்படும் மெய்மறக்கவைக்கும் இயற்கைச் சூழல் நிறைந்த பகுதிகளைக் கடந்து செல்ல நேரிட்டது. அங்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ரையின்’ நதியோரம், விண்ணை எட்டும் பனிச் சிகரங்கள், பண்டைய கலைகளைப் பறைசாற்றும் கட்டடங்கள், எழில்மிகு பள்ளத்தாக்குகள் போன்ற பலவற்றை ரசித்தபடி கைக்கிள் ஓட்டிச் சென்றனர்.
அங்கிருந்து ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் நகருக்குள் நுழைந்தனர். அங்கிருந்து பல ஐரோப்பிய நாடுகளை எல்லையாகக் கொண்ட ஆல்ப்ஸ் பனிமலைத் தொடரையும் தாண்டி அவர்கள் இத்தாலிக்குள் நுழைந்தனர். இத்தாலியில் அவர்கள் பயணம் செய்த ‘அல்பே ஏட்ரியா’ வழிப்பாதை அவர்களை மிகவும் கவர்ந்ததாகத் தெரிவித்தனர்.
ஐரோப்பாவின் தென்கிழக்குப் பகுதி
ஐரோப்பிய கண்டத்தின் தென்கிழக்கில் ‘பால்கன்ஸ்’ என்ற நிலப்பகுதி உள்ளது. அங்கும் பல நாடுகள் அமைந்துள்ளன.
இத்தாலியில் இருந்து இருவரும் சுலோவேனியா, குரோஷியா ஆகிய நாடுகளின் அழகிய சாலைகளைக் கடந்து போஸ்னியாவை வந்தடைந்து அங்கு சற்று அதிக காலம் செலவிட்டனர். அங்கிருந்து பால்கன் மலைத்தொடர்களைக் கடந்த நிலையில் அதுவரை 1,798 கிலோமீட்டர் தூரம் அவர்கள் சைக்கிளோட்டியுள்ளனர்.
அதன்பிறகு ட்ரான்ஸ் டினரிக்கா பாதை எனப்படும் சைக்கிளோட்டிகளுக்கென சிறப்பாக அமைக்கப்பட்ட வழியில் பயணம் செய்தனர். அந்தப் பாதை எட்டு ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் ஒன்றாகும். அப்பகுதியில் உள்ள ஏழை மக்களின் பொருளியலைத் தூண்டிவிட சுற்றுலாப் பயணத் தடமாக அது ஏற்படுத்தப்பட்டது.
சுலோவேனியா, குரோஷியா, போஸ்னியா ஹெர்சகோவினா, மொன்டிநீக்ரோ, அல்பானியா, கொசோவோ, வட மாசிடோனியா, செர்பியா ஆகிய நாடுகள் அந்த சைக்கிள் வழித்தடத்தில் உள்ளன.
ஒரு நாளில் 50 கிலோமீட்டர் வரை கடக்கும் வகையில் 95 முதல் 100 கட்டங்கள் ட்ரான்ஸ் டினரிக்கா பாதையில் உள்ளன. ஆச்சரியமூட்டுவதாக அந்தப் பாதையை வர்ணித்த அந்த சைக்கிளோட்டிகள் நேரமின்மையால் செர்பியாவையும் பல்கேரியாவையும் விரைவாகக் கடந்து செல்ல நேர்ந்தது.
கிழக்கு ஐரோப்பாவைக் கடந்து செல்லும் முதல் கட்டத்திலான அவ்வழித்தடத்தில் சில பகுதிகள், ‘இரும்புத் திரைப் பாதை’ என்று (அமெரிக்க-ரஷ்ய) பனிப்போர் காலத்தில் அழைக்கப்பட்ட முன்னாள் அரசியல் எல்லைகளும் உள்ளடங்கும்.
ஆசிய கண்டம்
அதன் தொடர்ச்சியாக அவர்கள் 2,798 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டி துருக்கியை அடைந்தனர். அதோடு ஆசிய கண்டத்தை எட்டிய அவர்கள் அந்நாட்டில் வியப்பூட்டும் வரவேற்பைப் பெற்றதாகவும் இயற்கை எழிலை எதிர்கொண்டதாகவும் விளக்கினர்.
அந்த நேரத்தில் ஒருவர் நோய்வாய்ப்பட்டதோடு ஜார்ஜியா செல்ல நேரம் ஆகிவிட்டதால் அதனை அடைய கிழக்கு துருக்கியில் இருந்து ரயில் பயணத்தை மேற்கொண்டனர்.
பிறகு ஜார்ஜியாவை ரயிலில் வந்தடைந்த அவர்கள் இருவரும், அங்கு சைக்கிளோட்டத்தைத் தொடர்ந்தனர்.
“ஜார்ஜியாவின் பசுமையான இடங்களில் சைக்கிளோட்டும் நாங்கள் 4,000 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து இங்கு வந்துள்ளோம்,” என்றனர்.
அடுத்த கட்ட சைக்கிள் வழித்தடத்தை விரைவில் பகிரப்போவதாகக் கூறிய இருவரும் “நாங்கள் கடந்துவந்த வழித்தடங்கள் அற்புதமானவை, உங்களின் எதிர்கால பயணங்களுக்கென அவற்றை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்,” என்று பதிவிட்டுள்ளனர்.
அந்த இரு சைக்கிளோட்டிகளும் எப்பொழுது தங்கள் பயணத்தைத் தொடங்கினர் என்ற விவரங்கள் இல்லை. இருப்பினும் செப்டம்பர் மாத மத்தியில் 4,000 கிலோ மீட்டர் தூரம் வரை அவர்கள் 40 நாள்கள் சைக்கிளோட்டி இருக்கலாம் என்று செயற்கை நுண்ணறிவுத் தரவுகள் தெரிவித்தன.
